மன்னன் மனமாற்றம் (பகுதி - 3)
பாண்டிய நாட்டின் அரண்மனை பணியாட்களின் ஆரவாரத்தால் அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது. சம்பந்தையரை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் தடல்புடலாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. மங்கையர்க்கரசியும் குலச்சிறையும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர். முந்தைய நாளில் சம்பந்தையரின் வருகை பற்றி மன்னனிடம் தெரிவித்த மங்கையர்க்கரசி ஏற்பாடுகளைச் செய்வதற்கான அனுமதியைப் பெற்றிருந்தாள். மன்னனும் எந்தவித வேற்றுமையையும் பாராட்டாது வைதீகப் பார்ப்பனரான சம்பந்தையரின் வருகைக்கு அனுமதியளித்திருந்தான். மங்கையர்க்கரசியும் குலச்சிறையும் ஏற்பாடுகளை நிறைவு செய்த பின் அரண்மனையின் வாயிலுக்கே வந்து சம்பந்தையரின் வருகையை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தனர். சற்று நேரத்துக்கெல்லாம் பரிவாரங்களின் ஆரவாரங்கள் தூரத்தில் கேட்கத் தொடங்கின. மங்கையர்க்கரசியும் குலச்சிறையும் ஒலி வந்த திசையையே பார்த்துக் கொண்டிருந்தனர். பணியாட்கள், சீடர்கள் புடைசூழ சம்பந்தையர் பல்லக்கில் பவனிவந்து கொண்டிருந்தார். பல்லக்கின் முன்னே கொடி, குடை, ஆலவட்டம் ஆகிய சின்னங்களைத் தாங்கியவாறு பணியாட்கள் வந்தனர். அவர்களுக்குப் பின்னே எட்டுப்பேர் சுமக்கும் முத்துப் பல்ல