கிரந்தம் தவிர்ப்போம்

 தமிழ் மொழி பொ.ஊ.மு. 2ம் நூற்றாண்டிலிருந்தேனும் எழுத்து வடிவில் வழங்கி வந்ததற்குச் சான்றுகள் காணப்படுகின்றன. இத் துவக்ககால எழுத்துமுறை தமிழி அல்லது தமிழ்ப் பிராமி என அழைக்கப்படுகின்றது. இத் தமிழி எழுத்துக்கள் ஓலைச் சுவடிகளில் எழுதப் பயன்படுத்தப்படும்போது சற்றே வளைந்த உருப்பெற்றது. இவ்வடிவ மாற்றம் ஒரு புதிய எழுத்து முறையான வட்டெழுத்து எனும் முறை தோன்ற வழிவகுத்தது. வட்டெழுத்துக்கள் பொ.ஊ. 4ம் நூற்றாண்டிலிருந்து பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. பிற்காலத்தில் தமிழகத்தின் வடபகுதி பல்லவர்களின் ஆட்சிக்குட்பட்டது. பல்லவர்கள் சமசுகிருத மொழியைத் தமது துவக்க கால ஆட்சி மொழியாகப் பயன்படுத்தினர். மேலும், இவர்கள் வைதீக மதத்துக்குப் பேராதரவு வழங்கினர். வைதீக மதத்தின் நூல்களைச் சமசுகிருத மொழியில் எழுதுவதற்குப் பல்லவர்களுக்கு ஒரு எழுத்து முறை தேவைப்பட்டது. ஏனெனில், சமசுகிருத எழுத்து ஒலிப்பு முறைகள் அனைத்தையும் வழக்கிலிருந்த வட்டெழுத்து முறையில் எழுத முடியவில்லை. எனவே, பல்லவர்கள் சமசுகிருத மொழிக் கல்வெட்டுக்கள், பட்டயங்கள் மற்றும் நூல்களை எழுதும் நோக்கில் ஒரு புதிய எழுத்து முறையை அறிமுகப்படுத்தினர். இவ்வெழுத்து முறை பல்லவக் கிரந்தம் என அழைக்கப்படுகிறது. இங்கு 'கிரந்தம்' எனும் சமசுகிருதச் சொல் நூல் எனப் பொருள்படும். பல்லவக் கிரந்த எழுத்து முறை பொ.ஊ. 4ம் நூற்றாண்டிலிருந்து வழங்கி வந்தது. எனவே, இக் காலப்பகுதியில் பழந் தமிழகத்தில் பொது மக்கள் தமிழ் மொழியிலும் வட்டெழுத்திலும் எழுதி வந்த அதேவேளை, ஆட்சியாளர்கள் சமசுகிருத மொழியிலும் பல்லவ கிரந்தத்திலும் கல்வெட்டுகள் மற்றும் பட்டயங்களை வெளியிட்டு வந்தனர்.

இக்காலப் பகுதியில் தமிழ்மொழியில் சமக்கிருதச் செல்வாக்கு மிகுந்தது. தமிழில் பெருமளவிலான சமசுகிருதச் சொற்கள் புகுத்தப்பட்டு, 'மணிப்பிரவாள நடை' எனும் புதிய நடை தோற்றம் பெற்றது. இதன் விளைவாகப் பல்லவக் கிரந்தம் மற்றும் வட்டெழுத்து ஆகியன கலக்கப்பட்டுப் புதிய எழுத்து முறையொன்று வடிவம் பெற்றது. இவ்வெழுத்து முறை கிரந்த எழுத்து முறை என அழைக்கப்படுகிறது. கிரந்த எழுத்து முறையின் பயன்பாடு பொ.ஊ. 7ம் நூற்றாண்டிலிருந்து காணப்பட்டதற்குச் சான்றுகள் உள்ளன. இக்கிரந்த எழுத்துக்களை அடியொற்றித் தனித்து உருவான சோழ-பல்லவ எழுத்துமுறை பல்லவர்களின் வீழ்ச்சிக்குப் பின் ஆட்சிக்கு வந்த சோழர்களால் பயன்படுத்தப்பட்டது. இவ்வாறாக, கிரந்த எழுத்து முறையின் தாக்கம் தற்காலத் தமிழ் எழுத்து முறைக்குள் ஏற்பட்டது.

கிரந்த எழுத்துக்கள்

தமிழ் மொழி இலக்கணத்தை வகுக்கும் தொல்காப்பியம் தமிழ் மொழியில் 31 எழுத்துக்கள் (12 உயிர், 18 மெய், 1 ஆய்தம்) காணப்படுவதாக வரையறுக்கின்றது. இதிலிருந்து, தமிழுக்கேயுரித்தான எழுத்துக்கள் எவையென அறிந்துகொள்ள முடியும். மேலும், சமசுகிருத மொழிச் சொற்களைத் தமிழாக்குவதற்குத் தொல்காப்பியம் சிறப்பான விதிகளை உருவாக்கியுள்ளது. இதன்படி, ஒரு சமசுகிருதச் சொல்லைத் தமிழ்ப்படுத்தும்போது, தமிழிலில்லாத சமசுகிருதத்திலுள்ள எழுத்து ஒலிப்புக்கள் அதற்கு நெருக்கமான தமிழெழுத்துக்கள் கொண்டே எழுதப்படவேண்டுமென தொல்காப்பியம் விதிக்கிறது. ஆகவே, தமிழ் மொழியில் கிரந்த எழுத்துக்களின் பயன்பாட்டைத் தொல்காப்பியம் எழுதியோர் ஏற்றுக்கொள்ள மாட்டார் என்றே தோன்றுகிறது.

மேலும், கிரந்த எழுத்துக்களால் உருவாக்கப்படும் ஒலிப்புக்கள் சிலவற்றைத் தமிழ் மொழியிலேயே காணக்கூடியதாயுள்ளது. அதாவது, ஆங்கிலம் போன்ற மொழிகளில் காணப்படுவதைப்  போன்றே, ஒரு எழுத்து அது தோன்றும் சொல்லைப் பொறுத்து வெவ்வேறு பலுக்கல் வடிவங்களை எடுக்கக் கூடியதாயுள்ளது. எடுத்துக்காட்டாகப் பின்வரும் சொற்களைக் கருதுவோம்.


கிரந்த எழுத்து - ஹ வரிசை
காம்
யாகாவாராயினும்
கிழ்ச்சி
குப்பு
கூழ்
பொதிகை


கிரந்த எழுத்து - ஸ வரிசை
மோம்
காசாளர்
வாசிப்பு
பேசு
தோசை

கிரந்த எழுத்து - ஜ வரிசை
மஞ்ள்
காஞ்சி
பஞ்சு
வாஞ்சை

இது மட்டுமன்றி எழுத்துக்களின் எண்ணிக்கைக் குறைப்பு என்பது இன்றைய தகவல் தொழில்நுட்ப யுகத்தில் மிகவும் இன்றியமையாததாகும். எழுத்துக்களின் குறைப்பு விசைப்பலகையின் அளவைக் குறைப்பதுடன் விசைப்பலகையின் பயன்பாட்டையும் எளிமையாக்கக் கூடியது. தமிழ்மொழியைத் தவிர வேறு எந்தப் பெரும்பான்மை மொழியிலும் தாய் எழுத்துமுறைக்கு மேலாக வேறு எழுத்துக்களின் பயன்பாடு காணப்படவில்லை. இன்றைய உலகமொழியாகக் (lingua franca) கருதப்படும் ஆங்கில மொழி கூடத் தனது தாய் எழுத்துமுறையான 26 எழுத்துக்களை மாத்திரமே பயன்படுத்தி வருகிறது. தனது எழுத்துமுறையில் சில ஒலிப்புக்களை ஏற்படுத்த முடியாவிட்டாலும் கூட இருக்கின்ற எழுத்துக்களைக் கொண்டே அச்சொற்களைத் தனது மொழியில் எழுதி வருகிறது. எடுத்துக்காட்டாகத் தமிழ், சீனம்,  மலையாளம் போன்ற மொழிகளில் வழங்கிவரும் 'ழ' எனும் பலுக்கலுக்கு ஆங்கிலமொழியில் தனி எழுத்துக்கள் இல்லாமையால் இப்பலுக்கல் தேவைப்படும் வேற்றுமொழிச் சொற்களை எழுத அவ்வுரிய இடங்களில் ' zh' எனப் பயன்படுத்தி வருகிறது.

எனவே, மேற்போந்த ஆதாரங்கள் தமிழில் கிரந்த எழுத்துக்களின் பயன்பாடு பிற்காலத்திலேயே துவங்கியது என்பதையும், கிரந்த எழுத்துக்களின் துணையின்றித் தமிழால் இயங்கமுடியுமென்பதையும், இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில் எழுத்துக்களின் குறைப்பு தமிழுக்கு நல்லதே என்பதையும் தெளிவாகக் காட்டுகின்றன. எனவே, அன்றாட எழுத்துப் பயன்பாட்டின்போது கிரந்த எழுத்துக்களின் பயன்பாட்டை அறவே ஒழித்து, தொல்காப்பியம் விதித்த எழுத்துக்களைக் கொண்டே தமிழில் எழுதுவோம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று

அக்கரைச் சீமையின் அழகு