காடு காத்த தியாகிகள்

 உலகில் உள்ள அனைத்து உயிரினங்களினதும் இருப்புக்கு இயற்கை இன்றியமையாதது. மனிதர்களோ அல்லது விலங்குகளோ இயற்கையோடு ஒன்றி வாழ்ந்து இயற்கையைப் பாதுகாத்தல் வேண்டும். சுற்றுச் சூழல் பாதுகாப்பைப் பற்றி இன்று பல்வேறு நாடுகளும் அரச சார்பற்ற நிறுவனங்களும் வலியுறுத்தி வருகின்றன. எனினும், இவ்வாறான சூழல் பாதுகாப்பு இயக்கங்களுக்கு முன்னோடியாக ஒரு மக்கள் குழுமம் செயற்பட்டு வந்துள்ளது. இந்தியாவின் ராசசுத்தான் மாநிலத்தில் வாழ்ந்துவருகின்ற பிசுணோய் மக்களே உலக சூழல் பாதுகாப்பு இயக்கங்களுக்கு அரிச்சுவடி கற்பித்தவர்கள்.

மேற்கு ராசசுத்தானின் தார் பாலைநிலத்தின் நடுவில் அமைந்துள்ள பகுதிகளில் நூற்றாண்டுகளாக வாழ்ந்துவரும் பிசுணோய் மக்கள் மரங்களை உண்மையிலேயே கடவுள்களாகக் கருதி வழிபட்டு வருகின்றனர். மேலும், இறந்தவர்களை எரிப்பதற்கு மரங்கள் தேவைப்படும் என்பதால் இறந்தவர்களைப் புதைக்கும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். எல்லாவற்றுக்கும் மேலாக இயற்கையை, குறிப்பாக மரங்களைப் பாதுகாக்கும் முயற்சியில் தமது இன்னுயிரையும் ஈந்த வரலாறும் இம் மக்களுக்கு உண்டு.

செப்டெம்பர் 11, 1730ம் ஆண்டு, பிசுணோய் மக்கள் அதிகமாக வாழும் கெசாரி எனும் ஊருக்குள் புகுந்த வீரர்கள் சிலர் அங்கிருந்த மரங்களை வெட்டத் துவங்கினர். அவர்கள் அருகிலிருந்த சோத்பூர் அரசின் மன்னரான அபய் சிங்கின் வீரர்கள். மன்னர் அபய் சிங் தான் புதிதாகக் கட்டத் துவங்கியிருந்த அரண்மனையின் வேலைகளுக்கான விறகைப் பெறும் பொருட்டுத் தமது வீரர்களை கெசாரிக்கு அனுப்பியிருந்தார். மரங்கள் வெட்டப்படும் ஓசையைக் கேட்ட அம்ரிதா தேவி எனும் பெண்மணி தனது வீட்டிலிருந்து வெளிப்பட்டு வீரர்கள் இருக்குமிடம் நோக்கி விரைந்து சென்றார். மரங்களை வெட்டிக்கொண்டிருந்த வீரர்களிடம் அழாக்குறையாக மரங்களை வெட்ட வேண்டாம் என்றும் அவை தமக்குக் கடவுள்கள் போன்றவை என்றும் கெஞ்சி மன்றாடினார். வீரர்களோ அம்ரிதா தேவியின் குரலுக்குச் செவிசாய்க்காது மரங்களை வெட்டும் பணியில் குறியாயிருந்தனர். இதற்கிடையில் அம்ரிதா தேவியின் மூன்று பிள்ளைகளும் ஏனைய ஊர் மக்களும் அவ்விடத்தில் கூடி விட்டனர். ஊர் மக்களும் ஒருமித்த குரலில் மரங்களை வெட்ட எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இவ்வேளையில் ஒரு முடிவுக்கு வந்த அம்ரிதா தேவி ஓடிச் சென்று அருகிலிருந்த மரத்தைக் கட்டிப்பிடித்தவாறு மரத்தை வெட்ட விட மாட்டேன் என்று ஓர்மத்துடன் எதிர்த்தார். அம்ரிதா தேவியின் மகள்களும் ஓடிச்சென்று மரங்களைக் கட்டிப் பிடித்துக்கொண்டனர். ஊர் மக்களும் இதே பாணியில் மரங்களைக் கட்டிப் பிடித்துக் கொண்டு எதிர்க்கத் துவங்கினர். எரிச்சலடைந்த வீரர்கள் தாம் மன்னரின் ஆணையை ஏற்று வந்துள்ளதாகவும் அதனை நிறைவேற்றுவதை எதிர்த்தால் அனைவரையும் கொன்று விடுவதாகவும் மக்களை மிரட்டினர். எனினும், பிசுணோய் மக்கள் தாம் எடுத்துக் கொண்ட செயலில் பின்வாங்காது மீண்டும் மீண்டும் மரங்களை வெட்டக் கூடாது எனக் குரலெழுப்பத் துவங்கினர். சினம் தலைகேறிய அவ் வீரர்கள் எதிர்த்த மக்களின் தலைகளைக் கோடரியினால் கொய்து வீழ்த்தினர். 350க்கும் மேற்பட்ட மக்கள் மரங்களைக் காக்கும் முயற்சியில் தம் இன்னுயிரை ஈந்தனர். அம்ரிதா தேவியின் தலையும் கொய்யப்பட்டது. இறக்கும் தறுவாயிலும் அவர், "மரங்கள் வெட்டப்படுவதைக் காட்டிலும் எனது தலை கொய்யப்படுவது மேலானது" என முழங்கியவாறு உயிர் நீத்தார்.

பிசுணோய் மக்கள் செய்த வீரத் தியாகம் அபய் சிங்கின் காதுகளுக்கு எட்டியது. உடனடியாக கெசாரிக்கு விரைந்த அவர் தமது வீரர்களின் வெறியாட்டத்தைத் தடுத்து நிறுத்தினார். தமது ஆணையினால் மாபெரும் பிழை நேர்ந்தது கண்டு பெரிதும் வருந்திய அவர் அம்மக்களிடம் பொது மன்னிப்புக் கோரினார். கெசாரியில் எவரும் இனி மரங்களை வெட்டக்கூடாது என்றும் மரங்களை வெட்டுவோர் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் எனவும் ஆணை பிறப்பித்தார்.

கெசாரி படுகொலையை நினைவுகூரும் வகையில் அமைக்கப்பட்ட நினைவுத்தூண்

பிசுணோய் மக்களின் இவ் அளப்பெரும் உயிர்க்கொடையை நினைவு கூரும் விதத்தில் நினைவுத் தூண் ஒன்று அமைக்கப்பட்டது. ஒவ்வோராண்டும் அக் குறிப்பிட்ட நாளில் நினைவுத் தூணுக்கருகில் ஒன்றுகூடும் பிசுணோய் மக்கள் தமது மூதாதையரின் தியாக வரலாற்றை நினைவு கூருகின்றனர். இன்றளவும் மரங்களைப் பாதுகாக்க பிசுணோய் இனத்தினர் கடும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். அம்ரிதா தேவியின் தியாகத்தைப் போற்றும் வகையில் இந்திய அரசு "அம்ரிதா தேவி சூழல் பாதுகாப்பு விருது" எனும் விருதை வழங்கி வருகிறது. மேலும், செப்டம்பர் 11ம் திகதி காடு காத்த தியாகிகள் நாளாக இந்தியாவெங்கிலும் நினைவு கூரப்படுகிறது. பிசுணோய் மக்களின் தியாகத்தை முன்மாதிரியாகக் கொண்டு 1973ம் ஆண்டில் சுந்தர்லால் பகுணா என்பவர் தலைமையில் சிப்கோ இயக்கம் எனும் மரங்களைக் காக்கும் இயக்கம் துவங்கப் பட்டது. பிசுணோய் மக்கள் செய்ததைப் போலவே இவவியக்கத்தின் உறுப்பினர்களும் மரங்கள் வெட்டப்படும் இடங்களுக்குச் சென்று அம் மரங்களைக் கட்டிப்பிடித்து தமது எதிர்ப்புப் போராட்டங்களை முன்னெடுக்கின்றனர்.

மரங்கள் எமது உயிர் என ஒப்புக்கு நாம் சொல்லிக்கொண்டாலும் அச் சொற்களுக்கேற்ப நடந்து மரங்களைக் காத்த பிசுணோய் மக்களின் தியாகம் போற்றப்படவேண்டும். எம்மைச் சூழவுள்ள மரங்களைக் காத்து வளர்ப்பதே உயிர் நீத்த பிசுணோய் மக்களுக்கு நாம் செய்யும் இறுதி மரியாதையாக அமையும்.

உசாத்துணைகள்

  • Pankaj Jain, Dharma and Ecology of Hindu Communities: Sustenance and Sustainability, Ch. 4 The Bishnoi Community, Pg. 51, Routledge, 2016.
  • Khabirul Alam and Dr. Ujjwal Kumar Halder, A PIONEER OF ENVIRONMENTAL MOVEMENTS IN INDIA: BISHNOI MOVEMENT, Journal of Education & Development, Vol-8, No.15, Pg. 283, June-2018.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று

கிரந்தம் தவிர்ப்போம்

அக்கரைச் சீமையின் அழகு