யாழ்ப்பாணப் பொது நூலகம்

 ஒரு அறிவார்ந்த சமூகத்தின் குறியீட்டுப் பொருளாக விளங்கிய யாழ்ப்பாணப் பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 39 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. இச் சமயத்தில் நூலகத்தின் வரலாற்றை மீட்டிப்பார்த்தல் பொருத்தமானதே.

யாழ்ப்பாணப் பொது நூலகம் எரியூட்டப்பட்ட வேளையில் 97000க்கும் அதிகமான நூல்களை உள்ளடக்கியிருந்தது. அதுமட்டுமன்றி, ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஓலைச் சுவடிகள் மற்றும் ஏனைய கையெழுத்துப் பிரதிகள் உள்ளடக்கிய பல்வேறு வரலாற்று ஆவணங்களையும் அது கொண்டிருந்தது. அத்தோடு, எரியூட்டப்படும் வேளையில், ஆசியாவிலேயே பெரிய நூலகங்களுள் ஒன்றாகவும் விளங்கியது. யாழ்ப்பாணப் பொதுநூலகம் எரியூட்டப்பட்ட செய்தி அறிந்து மொழியியல் வல்லுனரான தாவீது அடிகளாரும் தம்முயிரை நீத்தமை மேலுமொரு பேரிழப்பாயமைந்தது.
யாழ்ப்பாணத்துக்கென ஒரு பொது நூலகத்தின் தேவை 1933ல் K. M. செல்லப்பா எனும் தனி மனிதரின் எண்ணத்தில் உருவானது. இவர் தன்னுடைய வீட்டில் நடத்தி வந்த சிறு நூல்நிலையத்தை விரிவாக்கும் எண்ணத்தில் பத்திரிகைகளில் விளம்பரம் செய்தார். இவரது வேண்டுகோளுக்குச் செவிசாய்த்து, இலங்கை முழுவதிலுமுள்ள தமிழர்கள் பொருளுதவி அளித்ததோடு, தேவையான நூல்களையும் சிலர் வழங்கியுதவினர். 844 நூல்களுடன் யாழ்ப்பாண மத்திய நூலகம் எனும் பெயரில் இயங்க ஆரம்பித்த இந் நூலகம், நூலக உருவாக்கச் சபையினால் நிர்வகிக்கப்பட்டது. 1935 சனவரி 01ந் திகதி, நூலகத்தின் நிர்வாகம், யாழ்ப்பாண நகர சபையிடம் கையளிக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்தின் வாடகை வீடொன்றில் நடத்தப்பட்டுவந்த நூலகத்தை, வாசகர்களின் அதிகரிப்பின் காரணமாக புதிய கட்டடமொன்றுக்கு மாற்றத் தீர்மானிக்கப்பட்டது. யாழ்ப்பாண மாநகர சபையின் மேயர் சாம் A. சபாபதி அவர்கள் இதற்காக குழுவொன்றை நியமித்தார். பாதிரியார் லோங் இக்குழுவுக்குத் தலைமை தாங்கினார். நூலக நிர்மாணிப்புக்கான நிதியை மக்கள் மனமுவந்து வழங்கினர். இது தவிர, கலை நிகழ்ச்சிகள் நடத்துவதன் மூலமும், நன்கொடை திரட்டலின் மூலமும் நிதி திரட்டப்பட்டது.
நூலகத்தின் வடிவமைப்புக்காக உலகின் தலைசிறந்த நூலக விஞ்ஞானியான இந்தியாவைச் சேர்ந்த S.ரங்கநாதன் என்பவர் வரவழைக்கப்பட்டார். யாழ்ப்பாணத்தின் மையப்பகுதியில் யாழ்ப்பாண மாநகர சபைக்கண்மையில் யாழ்ப்பாணக் கோட்டையின் முற்றவெளியில் ஓரிடம் தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிய நூலகத்துக்கான வரைபடம் தமிழ்நாட்டைச் சேர்ந்த கட்டடக்கலைஞர் நரசிம்மன் அவர்களால் வரையப்பட்டது. நூலகக் கட்டடம் திராவிடக் கட்டடக் கலைப் பாணியில் அமைக்கப்பட்டது. 1954 மார்ச் 29ந் திகதி நூலகத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. 1959 ஒக்டோபர் 11ந் திகதி, அன்றைய யாழ்ப்பாண மாநகர முதல்வர் அல்பிரட் துரையப்பா நூலகத்தைத் திறந்து வைத்தார். யாழ்ப்பாணத்தில் இயங்கிவந்த யாழ்ப்பாண அமெரிக்க நூலகம் யாழ்ப்பாணப் பொதுநூலகத்துடன் இணைக்கப்பட்டது. புதிய நூல்களின் வரவும் நூலகத்தின் விரிவாக்கத்துக்குப் பங்களித்தது.
இவ்வாறாக, யாழ்ப்பாணச் சமூகம் மட்டுமன்றி, முழு இலங்கைக்குமே பெருமையாய் விளங்கிய இந் நூலகம் 1981 மே 31ந் திகதி நள்ளிரவு வேளையில் காடையர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டது. தமிழ்ச் சமூகம் தமது பாரிய சொத்தாக எண்ணிப் போற்றிப் பாதுகாத்த அந் நூலகம், ஒரே இரவில் சாம்பல் மேடாக்கப்பட்டது. ஒரு இனத்தின் மீதான ஆக்கிரமிப்பின் குறியீடாக நூலகங்களின் எரிப்பு உலக வரலாற்றின் பல இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அப்பாசியக் கலீபகத்தை ஆக்கிரமித்த மங்கோலியப் படைகள், அதன் தலைநகரான பாக்தாதில் அமைந்திருந்த மாபெரும் நூலகத்தை எரித்துச் சாம்பலாக்கிய நிகழ்வு, இரண்டாம் உலகப் போரில் இட்லர் தலைமையிலான செர்மானியப் படைகளால் ஐரோப்பாவின் பல நூலகங்கள் எரியூட்டப்பட்டுச் சிதைக்கப்பட்ட நிகழ்வு என்பவற்றின் வரிசையில் யாழ்ப்பாணப் பொது நூலகத்தின் எரிப்பும் உலக வரலாற்றின் கறுப்புப் பக்கங்களில் இடம் பெறுகின்றது.
ஒரு இனத்தின் நிலைப்புக்கு தேவையானது அறிவார்ந்த ஒரு சமூகத்தைத் தன்னுள் தொடர்ந்து தக்க வைத்தலே. எனவே, அவ்வாறான ஒரு சமூகத்தின் மூச்சாக இருக்கும் யாழ்ப்பாணப் பொது நூலகமும் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும். எம்மினத்தின் குறியீடாக அது நிலைத்து நிற்க வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று

கிரந்தம் தவிர்ப்போம்

அக்கரைச் சீமையின் அழகு