விடுதலை வீரன்

 இளைஞன் ரொலிலாலாவின் மனம் கொதித்துக் கொண்டிருந்தது. தனது இன மக்களை சொந்த இடத்திலிருந்து வெளியேற்றும் சட்டத்துக்கெதிராக அவன் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட அகிம்சை தழுவிய பேரணி காவல்துறையினரால் கொடூரமாக ஒடுக்கப்பட்டிருந்தது. மேலும், ரொலிலாலாவுக்கும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுவிட்டது. ஐந்து ஆண்டுகளுக்குப்பின் அவனுக்கு விடுதலை கிட்டினாலும் அகிம்சை மீது அவன் கொண்டிருந்த அசராத நம்பிக்கை தற்போது தளர்ந்துவிட்டிருந்தது. கியூபப் புரட்சித் தலைவர் பிடல் காசுட்ரோவின் யூலை 26 இயக்கத்தின் வெற்றிகள் அவன் சார்ந்த குழுவினரை ஆயுதப் போராட்டம் பால் ஈர்க்கச் செய்தது.

கெரில்லாப் போர்முறையில் நாட்டம் கொண்ட ரொலிலாலா, மார்க்சியப் போராளிகளான மாவோ மற்றும் சே குவேரா ஆகியோரால் எழுதப்பட்ட கெரில்லாப் போர் முறை பற்றிய நூல்களை வாசித்து தனது போராளிக் குழுவின் தாக்குதல் திட்டங்களைத் தீட்டுவதில் ஈடுபட்டான். அவனது குழு நாட்டின் இராணுவ மையங்கள், மின் நிலையங்கள், தொலைபேசி நிலையங்கள் போன்ற பொதுமக்களின் உயிரிழப்பு இல்லாத ஆனால் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தியது. இதன் மூலம் தனது அரசு நிறவெறிக் கொள்கைகளை மாற்றிக்கொள்ளும் என அவன் எண்ணினான். எனினும், ரொலிலாலா குழுவினரின் நடமாட்டங்களைக் கண்காணித்த அந்நாட்டு ராணுவம், ஒருநாள் ரொலிலாலா குழுவினர் பதுங்கியிருந்த இடத்தைச் சுற்றி வளைத்து ரொலிலாலா உள்ளிட்டோரைக் கைது செய்தது.
நீதிமன்றில் ரொலிலாலாவுக்கெதிரான வழக்கு ஆரம்பமானது. இதில் ரொலிலாலாவுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. வழக்கு முடிவில், காசுட்ரோவின் "வரலாறு என்னை விடுதலை செய்யும்" எனும் பேச்சுக்கு நிகரான, "நான் சாவதற்குத் தயார்" எனும் தலைப்பிலான உரையை ரொலிலாலா நிகழ்த்தினான். இவ்வுரை உலக நாடுகள் மத்தியில் ரொலிலாலாவுக்கு அனுதாப அலைகளைத் தோற்றுவித்தது. ஐக்கிய நாடுகள், உலக சமாதானப் பேரவை போன்றன ரொலிலாலாவின் விடுதலையை வலியுறுத்தின. என்றாலும். ரொலிலாலாவின் தண்டனை உறுதி செய்யப்பட்டது.
சிறையில் இருந்தபடியே ரொலிலாலா தனது இயக்கத்துக்கான ஆதரவைத் திரட்டத் தொடங்கினான். ரொலிலாலாவின் மனைவியின் தலைமையில் மக்கள் ஆர்ப்பாட்டங்களும் கண்டன ஊர்வலங்களும் நடத்தப்பட்டன. உலக நாடுகளின் பலத்த வற்புறுத்தலின் பேரில், பெப்ரவரி 1990ல் ரொலிலாலா நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட்டான். சிறையிலிருந்து மீண்டபின் ரொலிலாலா மக்களாட்சி முறையில் பற்றுதல் கொண்டு தனது இன மக்களுக்கான முழு வாக்குரிமை வேண்டி உலக நாடுகள் அனைத்தும் பயணப்பட்டான். அவனது இயக்கம் அரசியல் கட்சியாகவும் பரிணமித்தது. இறுதியாக 1994ல் அந்நாட்டின் முதல் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அத்தேர்தலில் ரொலிலாலாவின் கட்சி அறுதிப் பெரும்பான்மை பெற்று வெற்றியீட்டியது. ரொலிலாலா தனது நாட்டின் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட முதல் தலைவனானான்.
வெற்றிகளால் மமதை கொள்ளாது ரொலிலாலா தனது எதிர் இன மக்களுடன் நல்லிணக்க முயற்சிகளில் ஈடுபட்டான். உண்மை மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டு அமைதி முயற்சிகள் ஆரம்பமாயின. அவனது காலத்திலேயே ஒரு இனவெறி நாடு "வானவில் நாடாக" பரிணாமமும் பெற்றது.
நோபல் அமைதி விருது, லெனின் அமைதி விருது, அமெரிக்காவின் விடுதலைக்கான குடியரசுத் தலைவர் விருது, இந்தியாவின் பாரத ரத்னா உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் அவன் பெற்றுகொண்டான். அவன் உயிரோடிருக்கும் போதே அவனது பிறந்தநாள் முக்கிய பன்னாட்டு நாளாகவும் அறிவிக்கப்பட்டது.
நெல்சன் மண்டேலாவின் மறைவையடுத்து லண்டன் பாராளுமன்றச் சதுக்கத்திலுள்ள அவரது சிலைக்கு அஞ்சலி செலுத்தும் மக்கள்
அவனது இயற்பெயர் மறைந்து விட்டது. அவனது ஆசிரியர் அவனுக்கு வழங்கிய மாற்றுப் பெயராலேயே உலகம் அவனை அழைக்கிறது. தென்னாபிரிக்காவின் வெள்ளை நிறவெறி ஆதிக்கத்துக்கு எதிராக ஆயுதவழியிலும் அற வழியிலும் போராடி 27 ஆண்டுகால சிறைத்தண்டனையும் அனுபவித்து இறுதியில் இன்னா செய்தாருக்கும் நன்மை செய்து தென்னாபிரிக்காவில் நல்லிணக்கத்தை ஏற்படுத்திய நெல்சன் மண்டேலா தான் இந்த ரொலிலாலா.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அக்கரைச் சீமையின் அழகு

ஆயிரம் கொக்குகளின் கதை

கிரந்தம் தவிர்ப்போம்