மன்னன் மனமாற்றம் (பகுதி - 3)
பாண்டிய நாட்டின் அரண்மனை பணியாட்களின் ஆரவாரத்தால் அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது. சம்பந்தையரை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் தடல்புடலாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. மங்கையர்க்கரசியும் குலச்சிறையும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர். முந்தைய நாளில் சம்பந்தையரின் வருகை பற்றி மன்னனிடம் தெரிவித்த மங்கையர்க்கரசி ஏற்பாடுகளைச் செய்வதற்கான அனுமதியைப் பெற்றிருந்தாள். மன்னனும் எந்தவித வேற்றுமையையும் பாராட்டாது வைதீகப் பார்ப்பனரான சம்பந்தையரின் வருகைக்கு அனுமதியளித்திருந்தான்.
மங்கையர்க்கரசியும் குலச்சிறையும் ஏற்பாடுகளை நிறைவு செய்த பின் அரண்மனையின் வாயிலுக்கே வந்து சம்பந்தையரின் வருகையை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தனர். சற்று நேரத்துக்கெல்லாம் பரிவாரங்களின் ஆரவாரங்கள் தூரத்தில் கேட்கத் தொடங்கின. மங்கையர்க்கரசியும் குலச்சிறையும் ஒலி வந்த திசையையே பார்த்துக் கொண்டிருந்தனர். பணியாட்கள், சீடர்கள் புடைசூழ சம்பந்தையர் பல்லக்கில் பவனிவந்து கொண்டிருந்தார். பல்லக்கின் முன்னே கொடி, குடை, ஆலவட்டம் ஆகிய சின்னங்களைத் தாங்கியவாறு பணியாட்கள் வந்தனர். அவர்களுக்குப் பின்னே எட்டுப்பேர் சுமக்கும் முத்துப் பல்லக்கில் சம்பந்தையர் கம்பீரமாக வீற்றிருந்தார். பல்லக்கு அரண்மனை வாயிலருகே வந்து நின்றது. மங்கையர்க்கரசியும் குலச்சிறையும் சம்பந்தையரை எதிர்கொண்டழைக்க ஓடோடி வந்தனர்.
புன்னகை தவழும் முகத்துடன் சம்பந்தையர் பல்லக்கிலிருந்து இறங்கினார். அரண்மனைப் பெண் பணியாளர் மலர் தூவிப் பன்னீர் தெளித்து அவரை வரவேற்றனர். மங்கையர்க்கரசியும் குலச்சிறையும் மிகுந்த மரியாதையுடன் அவருக்கு வணக்கம் செலுத்தினர். சம்பந்தையரும் கையை உயர்த்தி அவர்களை ஆசீர்வதித்தார். பின்னர் மங்கையர்க்கரசியும் குலச்சிறையும் சம்பந்தையரை அரண்மனைக்குள் இருந்த விருந்தினர் மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர்.
சம்பந்தையருக்கு உரிய மரியாதை செய்து இருக்கையில் அமரச் செய்து இருவரும் அவரைப் பணிந்து நின்றனர். சம்பந்தையர் இருவரையும் நோக்கிப் பேசலானார்.
சம்: மங்கையர்க்கரசியே! குலச்சிறையே! இருவரும் சுகம்தானே!
மங் (ம) குல: நாங்கள் நலமே ஐயா.
சம்: நல்லது. பாண்டிய ராஜனைக் காணவில்லையே?
மங்: மன்னர் ஒரு அவசர அலுவலாக வெளியே சென்றிருக்கிறார். விரைவில் திரும்பி விடுவார்.
சம்: மன்னனிடம் நான் வரும் விஷயத்தைச் சொன்னாயா?
குல: ஐயா! அத் தகவலை மன்னருக்குத் தெரிவித்தோம். அவரும் மறுப்பேதும் கூறாது ஏற்பாடுகளை மேற்கொள்ள அனுமதியளித்தார். ஆயினும், இன்று காலையில் வைகையாற்றங் கரையினில் வாழும் மக்கள் மழை பெய்து வைகையில் பெருகிய வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதாகத் தகவல் பெற்றோம். இது அறிந்ததும் மன்னர் உரிய அலுவலர்களோடு மக்களைக் காணச் சென்றுள்ளார். அவர் திரும்பியதும் கட்டாயம் தங்களைக் காண வருவார்.
சம்: அப்படியா? சரி. மன்னன் திரும்பிய பின்பு அவனைச் சந்திக்கிறேன்.
மங்: அப்படியே ஆகட்டும் ஐயா! தாங்கள் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். நாங்கள் பிற்பாடு தங்களைச் சந்திக்கிறோம்.
சம்: நல்லது
மங்கையர்க்கரசியும் குலச்சிறையும் சம்பந்தையரை வணங்கி விடை பெற்றனர். சற்று நேரத்தின் பின்னர் பாண்டியன் நெடுமாறனும் அரசு அலுவலர்களும் திரும்பி வந்தனர். அவர்கள் மிகவும் தீவிரமாகக் கலந்தாலோசித்தவாறே சம்பந்தையர் தங்கியிருந்த அறையைக் கடந்து செல்ல முற்பட்டனர்.
உடனே மங்கையர்க்கரசி மன்னரை நோக்கி ஓடோடிச் சென்றார். மன்னரிடம் சம்பந்தையரின் வருகை பற்றிக் கூறலானார்.
மங்: வேந்தே! சற்றுப் பொறுங்கள். நமது அரண்மனைக்கு விருந்தினர் ஒருவர் வருகை தந்துள்ளார்.
நெடு: அப்படியா! யார் அவர்? எங்கிருந்து வந்திருக்கிறார்? தமிழாலே பாடவந்த புலவரா? அறிவையும் அறத்தையும் போதிக்கும் சமணத் துறவியா? அல்லது நம் நட்பு நாடி வந்த வேற்று நாட்டுத் தூதுவரா?
மங்: இவர்களில் எவருமல்ல வேந்தே! சோழ நாட்டிலிருந்து வருகை தந்துள்ள வேதமோதும் வேதியர் அவர். சம்பந்தையர் என்பது அவர் பெயர்.
நெடு: (குரலில் ஏளனம் தொனிக்க) ஓகோ! பால்கறந்து உறையூற்றித் தயிராக்கி, அதைக் கடைந்து வெண்ணெயாக்கி, அதையுருக்கி நெய்செய்த பின்னே அந்நெய்யை நெருப்பிலிட்டுப் பொசுக்கும் அறிவாளிப் பார்ப்பனனோ எனைக் காணவந்திருப்பது?
மங்: (தன் முயற்சி பலிக்கப் போவதில்லையோ என்ற ஏக்கத்தை அடக்கியவாறே) வேந்தே! யாராயிருந்தாலும் விருந்தினராக வந்தவரை முகமன் கூறி வரவேற்பதே நமக்குப் பெருமை தருவதாகும். எனவே, தாங்கள் மரியாதையளிக்கும் பொருட்டேனும் அவரைக் காண்பதே பொருத்தப்பாடுடையதாகும்.
நெடு: அதுவும் சரிதான். (தமது அலுவலர்களை நோக்கி) தாங்கள் அனைவரும் அவைக்குச் செல்லுங்கள். நான் சற்று நேரத்தில் வந்து தீர்மானமெடுக்கும் கூட்டத்தில் கலந்து கொள்வேன்.
அலுவலர்கள்: நல்லது மன்னா! அப்படியே செய்கிறோம். ஆயினும் மக்கள் துன்பத்தைத் தீர்க்கும் முடிவுகளை உடனடியாக ஆராய்ந்து செயற்படுத்த வேண்டிய இக்கட்டான நிலையில் நாம் இருப்பதால் தாங்கள் விரைந்து வந்து அவையை நெறிப்படுத்த வேண்டுகிறோம்.
நெடு: அப்படியே ஆகட்டும். விரைவில் திரும்பி விடுவேன். தாங்கள் செல்லுங்கள்.
அலு: நன்றி மன்னா!
மன்னன் நெடுமாறன் மங்கையர்க்கரசியோடு சம்பந்தையரைக் காணவேண்டி விருந்தினர் மண்டபம் நோக்கி விரைந்தான். மண்டபத்தில் சீடன் ஒருவன் தாம்பூலம் மடித்துப் பணிவோடு சம்பந்தையரிடம் நீட்டவே அவரும் அதை வாங்கி வாயிலிட்டுக் குதப்பியவாறே ஏதோ ஆழ்ந்த சிந்தனையிலிருந்தார். அருகிலே மேலுமிரு சீடர்கள் சாமரம் வீசியவாறு நின்றனர். மற்றுமொரு சீடன் சம்பந்தையரின் கால்களை இதமாகப் பிடித்துவிட்டுக் கொண்டிருந்தான்.
நெடுமாறன் மங்கையர்க்கரசியோடு ஏதோ உரையாடியபடியே மண்டபத்தினுள் திடுமென நுழைந்தான். இதனை எதிர்பாராத சம்பந்தையரின் சீடர்கள் அச்சத்தில் உறைந்து போய் மன்னனையே பார்த்தபடி நின்றனர். சம்பந்தையரும் மன்னனின் எதிர்பாராத வரவினால் சற்றே குழம்பினாலும் தடுமாறாது புன்னகை பூத்த முகத்தோடு எழுந்து மன்னனை வரவேற்றார். மன்னனும் பதிலுக்கு வணக்கம் கூறியபின்பு சம்பந்தையரிடம் உரையாடலானான்.
மன்: சோழநாட்டுப் பார்ப்பனனே! வருக! வருக! சோழ மன்னன் கையிலிருந்து பொருள்பெற வகையிருக்கையில் பாண்டியன் அவைக்குப் பொருள் இரந்து பெற வேண்டி வந்தனையோ?
சம்: (அச்சமும் ஏமாற்றமும் உள்ளத்திலே எழுந்த போதும் முகத்திலே அதைக் காட்டாது) பாண்டிய ராஜனே! யாம் பொருள் வேண்டுவதானால் சோழமகாராஜன் பரிபாலனம் புரியும் ராஜ்ய சபைக்குச் சென்று அதைப்பெற்றிருக்க முடியும்.
மன்: அப்படியானால் நீ என்னை நாடி வந்த நோக்கம் யாதோ?
சம்: மன்னா! அதுபற்றி விரிவாகப் பேசவேண்டியிருக்கிறது. நீ இவ்வாசனத்தில் அமர்வாயாக.
மன்: நன்று! நன்று! வீண்கதை பேசும் நிலையில் நானில்லை. நான் உடனடியாகச் செய்துமுடிக்க வேண்டிய பணிகளுண்டு. ஆகவே, உனக்கு நேரமிருந்தால் மாலைமங்கும் வேளையில் நாம் சந்திக்கலாம்.
சம்: (ஏமாற்றத்தை வெளிக்காட்டாது) அதுவே நல்லது. அப்படியே செய்வோம்.
மன்: சரி! நான் சென்று வருகிறேன். (மங்கையர்க்கரசியைப் பார்த்தவாறே) மங்கையர்க்கரசி உனக்குத் தேவையான பணிகளைக் கவனித்துக் கொள்வாள். (மங்கையர்க்கரசியும் ஆமோதிப்பதுபோலத் தலையசைக்கிறாள்)
மன்னன் அவையை நோக்கி விரைகிறான். மங்கையர்க்கரசியும் சம்பந்தையரும் மன்னன் வெளியேறுவதைப் பார்த்தவாறே விக்கித்து நிற்கின்றனர். இருவரது முகங்களிலும் ஏமாற்றத்தின் நிழல் சதிராடுகிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக