ஒக்டோபர் புரட்சி

 அது ஒரு மழைக்கால இரவுப் பொழுது. 1917ம் ஆண்டின் அக்டோபர் மாதம் 25ம் திகதி, ருசியாவின் புனித. பீற்றர்சுபேர்க் நகரத் தெருக்கள் வழியே ஒரு மக்கள்திரள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது ருசியாவின் குளிர்கால அரண்மனையை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தது.

அவ்வாண்டு பெப்ரவரி மாதத்தில் இடம்பெற்ற பாரிய மக்கள் எழுச்சியின் மூலம் கொடுங்கோலாட்சி செலுத்தி வந்த சார் மன்னனின் அதிகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து உருவான இடைக்கால அரசாங்கம் புனித. பீற்றர்சுபேர்க்கின் குளிர்கால அரண்மனையை அதன் தலைமைப் பீடமாகத் தேர்ந்தெடுத்திருந்தது. சாரின் ஆட்சியின் கீழ் மக்கள் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்திருந்தனர். எங்கும் உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடியது. நாட்டின் பெரும்பாலான நிலங்கள் மக்கள்தொகையில் இரண்டு வீதமேயான பிரபுக்களின் கைகளில் இருந்தது. தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் அடிமைகள் போல் உழைத்தனர். ஆனால், சார் இரண்டாம் நிக்கலாசு இவற்றைக் கருத்திலெடுக்காது தனது படைகளை முதல் உலகப்போரில் ஈடுபடுத்தியிருந்தான். போரின் காரணமாக ருசியப் பொருளாதாரம் மேலும் பலவீனமடைந்தது. மக்கள் பாணுக்காக கூட்டுறவுக் கடைகளில் வரிசையில் நின்றனர். இவ்வாறான பல்வேறு காரணங்களினால் கிளர்ந்தெழுந்த மக்கள் படை சாரின் ஆட்சிக்கு முடிவுகட்டி ஒரு மக்கள் மன்றத்தைத் தோற்றுவித்தனர்.
புனித. பீற்றர்சுபேர்க் நகரத் தெருவொன்றில் இடைக்கால அரசின் ராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகும் போராட்டக் காரர்கள்
ஆனால், இடைக்கால அரசாங்கம் பிரபுக்கள் போன்ற முதலாளித்துவவாதிகளால் தலைமை தாங்கப் பட்டது. அது போரை நிறைவு செய்வதை விடுத்து தொடர்ந்து நடத்திச் செல்வதில் முனைப்புக் காட்டியது. மேலும், தொழிலாளர்களின் சிக்கலிலும் அது ஆர்வமாக இருக்கவில்லை. இது, மக்களிடையே அரசின் மீதான நம்பிக்கையைத் தகர்த்தெறிவதாய் அமைந்தது. எனவே, பெப்ரவரிப் புரட்சிக்குப் பின்னும் ருசியாவில் அமைதியின்மை தொடர்ந்தது. விவசாயிகள் நிலங்களைக் கோரினர். படைவீரர்கள் சமாதானம் வேண்டினர். பொதுமக்களோ பாணுக்காய் ஏங்கினர். இதையடுத்து விளாடிமிர் லெனின் தலைமையிலான இடது சாரி போல்சுவிக்குகள் இடைக்கால அரசுக்கெதிரான போராட்டத்தை தீவிரப்படுத்தினர். இதன் விளைவாக ருசியாவெங்கிலும் புரட்சி உருவாகி போல்சுவிக்குகள் முக்கிய நகரங்களின் அதிகாரங்களைக் கைப்பற்றினர். இதன் இறுதிக் கட்டமாக தலைநகர் புனித. பீற்றர்சுபேர்க் நோக்கிய தாக்குதல் அக்டோபர் மாதமளவில் தீவிரமாகியிருந்தது. அக்டோபர் 25ம் திகதி இரவு குளிர்கால அரண்மனை போல்சுவிக்குகள் வசமானது.
விளாடிமிர் லெனின்
அக்டோபர் 25, 1917ம் ஆண்டு இரவு 9.40 மணியளவில் குளிர்கால அரண்மனையிலிருந்து உலகின் முதலாவது தொழிலாளர் தலைமையிலான பொதுவுடமை அரசுக்கான அறிவிப்பு விளாடிமிர் லெனின் மூலமாக உலகுக்கு பறைசாற்றப்பட்டது.
போரிசு குசுதோதியேவ் வரைந்த ஓவியம், 1920
லெனின் பதவியேற்றதும், ருசியா முதல் உலகப் போரிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதாக அறிவித்தார். அடுத்த ஐந்து ஆண்டுகள் ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், சப்பான், பிரான்சு, சீனா போன்ற பல்வேறு முதலாளித்துவ நாடுகளின் முழுமையான ஆதரவுடன் நடத்தப்பட்ட முதலாளித்துவவாதிகளின் கிளர்ச்சியையும் வெற்றிகரமாக ஒடுக்கிய லெனின் தலைமையிலான தோழர்கள், 1922ம் ஆண்டு டிசம்பர் 30ம் திகதி ஏனைய மூன்று தன்னாட்சி பெற்ற குடியரசுகளையும் இணைத்துக்கொண்டு சோவியத் சமவுடமைக் குடியரசுகளின் ஒன்றியத்தை உருவாக்கினர்.
அன்றிலிருந்து அடுத்த 70 ஆண்டுகளில் சமத்துவக் கொள்கையைப் போதித்து, பேரரசுகளிடமிருந்து உலக மக்களின் அடிமைத்தளையை உடைத்தெறியும் முயற்சிக்கு ஆதரவு வழங்கிக்கொண்டு, மருத்துவம், தொழில்நுட்பம், விண்வெளி அறிவியல், கட்டுமானம், விளையாட்டு போன்ற பல்வேறு துறைகளில் சாதனை படைத்து, புரட்சி வானின் ஒளிரும் சிவப்பு விண்மீனாக விளங்கிய சோவியத் ஒன்றியம் உலகின் அதிசயங்களுள் ஒன்று.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று

கிரந்தம் தவிர்ப்போம்

அக்கரைச் சீமையின் அழகு