ஆயிரம் கொக்குகளின் கதை

 சிறுமி சதகோ சசாகிக்கு அப்போது இரண்டு வயதிருக்கும். சப்பானின் இரோசிமா நகரில் அவளது குடும்பம் வசித்து வந்தது. 1945ம் ஆண்டு ஆகத்து 6ம் திகதி அமெரிக்கப் போர்விமானமான, எனோலா கே தனது நாட்டு விஞ்ஞானிகளால் புதிதாகத் தயாரிக்கப்பட்ட சிறப்பு வாய்ந்த குண்டை இரோசிமா மீது வீசுகிறது. குண்டின் சக்தி 2 கிமீக்கு அப்பால் உள்ள சதகோவின் வீட்டையும் தாக்குகிறது. குண்டின் அதிர்ச்சியால் வீட்டிலிருந்து தூக்கி வீசப்பட்டாள் சதகோ. ஆனால், அவளுக்குப் பெரிதாக காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. அவளது பெற்றோர் அவளைத் தூக்கிக் கொண்டு தப்பி ஓடுகின்றனர்.

1955 அளவில் சதகோ சசாகி

சதகோ வளர்ந்ததும் அவளைப் பாடசாலையில் சேர்க்கின்றனர் அவளது பெற்றோர். பாடசாலையில் திறமைகாட்டிய சதகோ, தனது பாடசாலையின் அஞ்சலோட்ட அணியிலும் இடம்பிடித்தாள்.

1954 நவம்பர் மாதமளவில் சதகோவின் கழுத்து மற்றும் காதின் பின்னால் வீக்கம் ஏற்பட்டது. மேலும் கால்களிலும் ஊதா நிறப் பொட்டுக்கள் உருவாயின. பதறிப்போய் மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற பெற்றோருக்கு காத்திருந்தது பேரதிர்ச்சி. சதகோவுக்கு குருதிப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. மேலதிக சிகிச்சைக்காக அவள் மருத்துவமனையிலே அனுமதிக்கப்பட்டாள். அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த இன்னொரு சிறுமி அவளுக்குத் தோழியானாள்.

ஒருநாள் அவளது தோழி சதகோவுக்கு சப்பானிய பரம்பரைக் கதையான "ஆயிரம் கொக்குகளின் கதை"யைக் கூறினாள். அதன்படி, யாராவது, ஆயிரம் காகிதக் கொக்குகளைச் செய்தால் கடவுள் அவர்களது விருப்பத்தை நிறைவேற்றுவார் என்பதை சதகோ அறிந்துகொண்டாள். எனவே அவள் காகிதக் கொக்குகளைச் செய்யத் தொடங்கினாள். ஆனால், அவளுக்கு போதுமான காகிதங்கள் கிடைக்கவில்லை. எனவே, தினமும் அருகிலுள்ள நோயாளிகளின் அறைகளுக்குச் சென்று அவர்களுக்கு வரும் பரிசுப் பொருட்களைச் சுற்றப் பயன்படும் காகிதங்களைக் கேட்டு வாங்கி அதிலே மேலும் கொக்குகளைச் செய்தாள். அவளது நண்பர்களும் அவளுக்காக காகிதக் கொக்குகள் செய்யத் தொடங்கினர்.

1000 கொக்குகள் இலக்கை அடைந்தபின்னும் சதகோ தொடர்ந்து கொக்குகள் செய்வதைக் கைவிடவில்லை. இதனிடையே, அவளது உடல்நிலை மேலும் மோசமாகிக்கொண்டே போனது. சதகோ உணவு உண்பதையும் நிறுத்திவிட்டாள். ஒருநாள் அவளது தாய் தந்தையர் கொஞ்சம் சோறும் தேநீரும் கொண்டு வந்து சாப்பிடக் கொடுத்தனர். அவளும் அதை வாங்கிச் சாப்பிட்டுவிட்டு "மிக நன்றாயிருக்கிறது" என்று கூறினாள். அதுவே அவளது இறுதிச் சொல்லாக ஆகிப்போனது.

சதகோவின் இறுதிப் பயணம்

1955ம் ஆண்டு அக்டோபர் 25ம் திகதி காலையில் சதகோ தனது 12ம் வயதில் இவ்வுலக வாழ்வை முடித்துக்கொண்டாள். அவள் செய்த காகிதக் கொக்குகளும் அவளது உடலுடன் சேர்த்துப் புதைக்கப்பட்டன.

அவளது இறப்பின் பின்னர் சதகோவின் நண்பர்கள், சதகோவுக்கு நினைவாலயம் எழுப்ப நிதி திரட்டினர். 1958ல் இரோசிமா நினைவு ஞாபகார்த்தப் பூங்காவில் தங்கக் கொக்கை ஏந்திக்கொண்டிருக்கும் சிறுமி சதகோவின் சிலை திறந்து வைக்கப்பட்டது. பூங்காவைப் பார்க்கவரும் மக்கள் தம்முடன் ஒரு காகிதக்கொக்கை எடுத்துச் செல்ல மறப்பதில்லை. அவர்கள் சதகோவின் சிலைக்கு முன்னால் தமது காகிதக் கொக்கை வைத்து சதகோவுக்கு மரியாதை செலுத்துகின்றனர்.

சதகோவின் சிலைக்குக் கீழேயுள்ள பீடத்தில் பின்வரும் வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.

இது எங்கள் அழுகை
இது எங்கள் பிரார்த்தனை
உலகத்துக்கு சமாதானம் உண்டாகட்டும்

சதகோவின் நினைவுச் சிலைக்கு முன் ஒரிகாமி காகிதக் கொக்குகளை வைத்து அஞ்சலி செலுத்தும் சப்பானிய மாணவர்கள்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று

கிரந்தம் தவிர்ப்போம்

அக்கரைச் சீமையின் அழகு