அக்கரைச் சீமையின் அழகு

 இன்றைய சிங்கப்பூரினைக் கண்டு வியந்து பாராட்டும் பலர் 1965ல் சிங்கப்பூரைக் கண்டிருந்தால் அதிர்ச்சியடைவர். ஏனென்றால் இனமுறுகல்களுக்குள் சிக்கித் தவித்த ஒரு நாட்டை அவர்கள் காண நேரிட்டிருக்கும். பிரித்தானியக் குடியேற்ற நாடாக விளங்கிய சிங்கப்பூர் இரண்டாம் உலகப் போரில் சப்பானிய ஆதிக்கத்துக்குட்பட்டு பெரும் அழிவுகளையும் சந்தித்தது. 1959ல் பிரித்தானியாவிடமிருந்து விடுதலையடைந்த சிங்கப்பூர், 1963ல் மலாயா, போர்ணியோ ஆகியவற்றுடன் இணைந்து மலேசியக் கூட்டமைப்பாக உருவானது. ஆனால், மலேசியாவின் பெரும்பான்மை இனத்தவராகிய மலாயருக்கும், சிங்கப்பூரின் பெரும்பான்மையினராகிய சீனருக்குமிடையில் இனப் பிரச்சினைகள் உருவாயின. இதன் உச்சகட்டமாக 1964ல் இனக் கலவரங்களும் வெடித்தன.

கலவரத்தை அடக்குவதற்கு வழி தெரியாத அப்போதைய மலேசியப் பிரதமர் துங்கு அப்துல் ரகுமான், சிங்கப்பூரை தமது கூட்டமைப்பிலிருந்து வெளியேற்ற முடிவு செய்தார். (உலக வரலாற்றிலேயே சுயவிருப்பின்றி விடுதலையடைந்த ஒரே நாடு சிங்கப்பூர் தான்.) 1965ம் ஆண்டு ஆகத்து 9ம் திகதி காலை வேளையில், மலேசியப் பாராளுமன்றம் சிங்கப்பூரை கூட்டமைப்பிலிருந்து வெளியேற்றும் சட்டத்தை 126 - 0 என்ற வாக்குகள் அடிப்படையில் நிறைவேற்றியது.
அன்றைய தினம் தொலைக்காட்சியில் உரையாற்றிய சிங்கப்பூரின் முதலமைச்சர் லீ குவான் யூ, "இது ஒரு மன உளைச்சலை உருவாக்கும் தருணம்" என்று வருத்தத்தோடு குறிப்பிட்டார். புதிய சிங்கப்பூரின் பிரதமராக லீ குவான் யூ பதவியேற்றார். மேலும், வெளியுறவுத் துறை அமைச்சராக சின்னத்தம்பி ராசரத்தினம் (இவர் யாழ்ப்பாணத்தில் பிறந்தவர்) பதவியேற்றார். புதிய சிங்கப்பூரின் வெளியுறவுக் கொள்கைகளைச் சிறப்பாக வகுத்து வெளிநாட்டுத் தொடர்புகளை ஏற்படுத்த அவர் வழிவகுத்தார். மேலும், ஐக்கிய நாடுகள் மற்றும் பிரித்தானிய பொதுநலவாயம் ஆகியவற்றில் சிங்கப்பூரை இடம்பெறச் செய்வதிலும் ராசரத்தினம் முனைப்புடன் செயற்பட்டார்.
சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூ
720 சதுர கி.மீ. பரப்பளவே கொண்ட சிங்கப்பூர் எந்தவிதமான இயற்கை வளங்களும் அற்ற நாடாகும். மேலும், வேலைவாய்ப்பின்மை, நிலப்பற்றாக்குறை, தங்குமிட வசதியின்மை, போதிய கல்வியறிவின்மை போன்ற பல்வேறு பிரச்சினைகள் சிங்கப்பூரை ஆட்டிப் படைத்தன. சிங்கப்பூரின் ஒரே பலமாக இருந்தது அதன் கடல் வழி கேந்திர முக்கியத்துவம் மட்டுமே ஆகும்.
சிங்கப்பூர் வரைபடம்
எனவே லீ குவான் யூ சேவைகள் மற்றும் கைத்தொழில் துறைகளில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கினார். அந்நிய முதலீடுகளைக் கவரும் நோக்கில் வரிக்குறைப்புத் திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன. லீ யின் அயராத முயற்சியின் பயனாக 1970களில் சிங்கப்பூர் உலகின் மூன்றாவது பெரிய மசகு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமாக உருவாகியது. மேலும், வீடில்லாப் பிரச்சினையைத் தீர்க்க குறைந்த செலவிலான அடுக்குமாடிக் குடியிருப்புகள் உருவாக்கப்பட்டன. இரண்டே வருடங்களில் 25,000 அடுக்குமாடிக் குடியிருப்புகள் உருவாயின. சிங்கப்பூர் துறைமுகம் புனரமைக்கப்பட்டு உலகின் முக்கிய துறைமுகமாக மாற்றமடைந்தது.
சிங்கப்பூரின் கல்விமுறை சீர்திருத்தப்பட்டு தொழில்முறைக் கல்வி முதன்மை பெற்றது. சிங்கப்பூர் கல்விக்காக தனது ஆண்டிறுதிப் பாதீட்டின் 20%த்தை ஒதுக்குகிறது. சிங்கப்பூரின் பொருளாதாரத்தை முன்னேற்றும் விதத்திலான கல்வியே முதன்மை பெறுகிறது.
இன்று சிங்கப்பூர் உலகின் முன்னணி பொருளாதார சக்திகளுக்குச் சவால்விடும் வகையில் பொருளாதாரத்தில் முன்னணி வகிக்கிறது. சீனர், தமிழர், மலேயர் போன்ற பல்லின மக்கள் ஒரே குடும்பமாக வாழ்கின்றனர். லீ குவான் யூவின் தாரக மந்திரமான, "ஒரே தலைமுறையினுள் மூன்றாம் உலகிலிருந்து முதலாம் உலகுக்கு" ("third world to first world in a single generation") என்ற இலட்சியக்கனவை நிறைவேற்றி உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக மிளிர்கின்றது சிங்கப்பூர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆயிரம் கொக்குகளின் கதை

கிரந்தம் தவிர்ப்போம்