கனியிருப்பக் காய் கவர்ந்தற்று

மனித நாகரிகங்கள் உருவான காலந்தொட்டு வெவ்வேறு பண்பாட்டுக் கூறுகளைக் கொண்ட மக்கள் குழுமங்களுக்கிடையே தொடர்பாடல்கள் நிகழ்ந்து வந்துள்ளன. பொதுவாகப் பார்க்கும்போது உலகின் ஒவ்வொரு பண்பாட்டுக் குழுமமும் தமது உறுப்பினர்களிடையே கருத்துக்களைப் பரிமாறுவதற்காக வெவ்வேறு மொழிகளைப் பயன்படுத்தி வந்துள்ளன. இன்றும் கூட இனக்குழுமங்களை வகைப்படுத்தும் போது மொழியின் அடிப்படையிலேயே வகைப்படுத்தப்படுகின்றன. எடுத்துக்காட்டாக சீனர், அரேபியர், எசுப்பானியர் போன்ற இனக்குழுமங்களில் மொழியே பிரிக்கும் எல்லைக்கோடாகக் காணப்படுகின்றது.

காலப்போக்கில் வெவ்வேறு மக்கள் குழுமங்களுக்கிடையிலான தொடர்பாடலின் விளைவாக, அவற்றின் மொழிகளும் மாற்றம் பெற்று வந்துள்ளன. இன்று, முழுமையாகத் தூய்மை பெற்ற ஒரு "வாழும்" மொழியைக் காணல் அரிது. வாணிகம், பேரரசுகள், மதங்கள் போன்ற இன்னோரன்ன காரணங்களினால் ஒரு மொழியில் இன்னொரு மொழியின் தாக்கம் ஏற்படுகின்றது. இத்தாக்கம் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் இருக்குமாயின், கலப்பு ஏற்படுகின்ற மொழி தனது தனித்தன்மையைப் பாதுகாத்துக் கொண்டு தொடர்ந்தும் உயிர்ப்புடன் இருக்கலாம். மாறாக, அளவுக்கு மீறிய பிறமொழிக் கலப்பு அம்மொழியின் சிதைவுக்கே வித்திடும்.

ஒரு மொழியின் அழிவு என்பது உண்மையில் ஒரு பண்பாட்டின் அல்லது ஒரு இனத்தின் அழிவாகவே பார்க்கப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக, ஐரோப்பியக் கண்டத்தில் பரவியிருந்த கவுல் மக்களையும் அவர்களின் மொழியான கவுலிய மொழி என்னும் கெல்டிக் மொழிக்குடும்ப மொழியினையும் நோக்கலாம். இம்மொழி பொ. ஊ. மு. 6ம் நூற்றாண்டிலிருந்து வழக்கில் இருந்தமைக்குச் சான்றுகள் உண்டு. பல்வேறு கல்வெட்டுச் சான்றுகளும் இதற்கு வலுச் சேர்க்கின்றன. இவ்வாறு சிறப்புற்று விளங்கிய அம்மொழி, பொ. ஊ. மு. 60 களில் ரோமானியப் பேரரசினால் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்பினால் சிறிது சிறிதாக அழியத் துவங்கியது. ரோமானியப் பேரரசு தம்மால் வெற்றி கொள்ளப்பட்ட கவுல் பகுதிகளில் லத்தீன் மொழியைத் திணித்தது. இதன் விளைவாக, பொ. ஊ. 6ம் நூற்றாண்டளவில் கவுலிய மொழி முற்றிலுமாக மறைந்தது. கவுலிய மொழியின் அழிவு கவுல் பண்பாட்டுக்கும் ஒரு முற்றுப்புள்ளியை வைத்தது.

தமிழ் மொழியும் இத்தாக்கத்துக்கு விதிவிலக்கல்ல. வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களில், பிராகிருதம், பாலி, சமக்கிருதம் போன்ற வெவ்வேறு மொழிகள் தமிழின் மீது தாக்கம் செலுத்தியுள்ளன. இவற்றுள் சமக்கிருத மொழியின் தாக்கமே மிகவும் வலுவானது. பொ. ஊ. 6ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து தமிழில் சமக்கிருதச் சொற்கள் பெருமளவில் கலக்கத் துவங்கின. பொ. ஊ. 11ம் நூற்றாண்டளவில் இக்கலப்புக்கு இலக்கணம் வகுக்கும் அளவுக்கு தமிழில் சமக்கிருதம் பாரிய தாக்கத்தைச் செலுத்தியது. பெரும்பாலான பக்தி இலக்கியங்களில் இதனைத் தெளிவாகக் காணமுடியும். இதன் விளைவாகவே மலையாளம் எனும் புதிய மொழி தோற்றம் பெற்றது என்னும் ஒரு கருத்தும் நிலவுகிறது (கருதுகோள் அளவில்). பொ. ஊ. 20ம் நூற்றாண்டில் தனித்தமிழ் இயக்கம் தலையெடுக்கும் வரை இந்நிலை தொடர்ந்தது. தனித்தமிழ் இயக்கத்தின் முயற்சிகளினால், தமிழின் தனித்தன்மை பெருமளவில் மீட்டெடுக்கப்பட்டாலும், பொது வழக்கில் சமக்கிருதச் செல்வாக்கு இன்னும் தொடர்வதையே காணக்கூடியதாயுள்ளது. தமிழில் ஒரு பொருளை அல்லது தகவலைக் குறிக்கச் சொல்லொன்று இல்லை எனும் நிலையில், பிறமொழிச் சொல்லைப் பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ளத் தக்கதே. எனினும், மூல மொழியில் அதனைக் குறிக்கச் சிறந்த சொற்கள் பல இருக்கையில் வேற்று மொழிச் சொல்லைப் பயன்படுத்துவது என்பது, வள்ளுவரின் குறள் கூறுவது போல் "கனியிருக்கக் காய் கவரும்" செயலேயாகும். எனவே இப் பதிவில், தமிழில் பொதுவாக வழங்கப்பட்டு வரும் ஒரு சில சமக்கிருதச் சொற்களுக்கான தமிழ்ச் சொற்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. பொது வழக்கில் தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் இப் பட்டியல் தரப்படுகிறது. இது ஒரு துவக்கமே (ஆரம்பமல்ல ;)). இதன் மூலம், தமிழில் சமக்கிருதத் தாக்கம் குறைவடைய வேண்டும் என்பதே பதிவாசிரியரின் நோக்கமாகும்.

பொது வழக்கிலுள்ள சமக்கிருதச் சொல் - இணையான தமிழ்ச் சொல்

சூரியன் - ஞாயிறு, ஆதவன், பகலவன், கதிரவன், வெய்யோன், பரிதி, சுடரோன்

(cha)ந்திரன் - திங்கள், மதி, நிலா, அம்புலி

(bhu)மி - உலகம், வையம், ஞாலம், குவலயம், புவி, மேதினி

ஆனந்தம், சந்தோ(sha)ம் - மகிழ்ச்சி, களிப்பு, பூரிப்பு, உவகை

ஆகாயம் - வானம், விண், விசும்பு

மேகம் - முகில்

நட்சத்திரம், தாரகை - உடு, விண்மீன்

கிரகம் - கோள்

விஞ்ஞானம் - அறிவியல்

க(sh)டம் - துன்பம், தொல்லை, இன்னல், இடர், துயர்

பிரச்சினை - சிக்கல், இடர்

சமுத்திரம், சா(ga)ரம் - கடல், ஆழி

நதி - ஆறு

(cha)க்கரம் - சில்லு, ஆழி

சத்தம் - ஓசை, ஒலி

தேகம், சரீரம் - உடல், யாக்கை

ரத்தம் - குருதி, உதிரம்

அர்த்தம் - பொருள்

வார்த்தை - சொல்

மத்தியானம் - நண்பகல்

தரு, விருட்சம் - மரம்

தினம் - நாள்

வாரம் - கிழமை

வரு(sha)ம் - ஆண்டு

தேசம் - நாடு

(ja)னநாயகம் - மக்களாட்சி

கிராமம் - ஊர்

தர்மம், நீதி - அறம்

சங்கம் - கழகம், மன்றம்

பரீட்சை - தேர்வு

தர்க்கம் - அளவை

ரா(ja) - மன்னன், அரசன், வேந்தன், கோன்

ராணி - அரசி

மந்திரி - அமைச்சர்

யுத்தம் - போர், சமர், சண்டை

ஆயுதம் - கருவி

லட்சியம் - குறிக்கோள்

சேவை - பணி

தனம், நிதி - பொருள், திரு, செல்வம்

தானியம் - கூலம்

சித்திரம் - ஓவியம்

சீக்கிரம், துரிதம் - விரைவு

சுத்தம் - தூய்மை

அசுத்தம் - அழுக்கு

வைத்தியம் - மருத்துவம்

வாகனம் - ஊர்தி, வண்டி

ஆதி - முதல்

அந்தம் - முடிவு

ஆரம்பம் -தொடக்கம்

ஐக்கியம் - ஒற்றுமை

சம்பந்தம் - தொடர்பு

தைரியம் - துணிவு

இயந்திரம் - பொறி

உபயோகம், பிரயோகம் - பயன்படுத்தல், கையாளல்

பிரயோ(ja)னம் - பயன்

வி(she)(sha)ம் - சிறப்பு

வி(sha)ம் - நஞ்சு

புத்தி - அறிவு

ஞானம் - புலமை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கிரந்தம் தவிர்ப்போம்

அக்கரைச் சீமையின் அழகு