செஞ்சிலுவைச் சங்கம்

சூன் 24, 1859ம் ஆண்டு, மாலைநேரத்தில் வடக்கு இத்தாலியின் சிறு நகரான சோல்ஃபெரினோ நகருக்கூடாக ஒரு குதிரை வண்டி நகர்ந்து கொண்டிருக்கிறது. குதிரை வண்டியில் ஒரு வணிகர். அவரது பெயர் ன்றி டுனான்ட். சுவிட்சர்லாந்து வணிகரான டுனான்ட், அப்போதைய பிரெஞ்சுக் குடியேற்ற நாடாகிய அல்சீரியாவில் வணிகம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். எனினும், பிரெஞ்சு வணிக நிறுவனம் அவரது முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட்டிருந்தது. எனவே, பிரெஞ்சுப் பேரரசனாகிய மூன்றாம் நெப்போலியனைக் கண்டு இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காணலாம் என அவர் எண்ணியிருந்தார்.

சோல்ஃபெரினோ நகரின் இருமருங்கிலும் டுனான்ட் கண்டதோ காயமடைந்து குருதி வெள்ளத்தில் மரண ஓலமிட்டுக்கொண்டிருக்கும் போர்வீரர்களைத் தான். இன்றைய இத்தாலியின் சிறுபகுதியான சார்டினியாவுக்கும் ஆசுத்திரியப் பேரரசுக்குமிடையில் பெரும் போர் மூண்டிருந்தது. சார்டினியாவின் சுதந்திரத்தை ஆதரித்து ஃபிரான்சும் போரில் கலந்துகொண்டிருந்தது. போரின் உக்கிரம் அன்றைய நாளில் மாத்திரம் 40,000 வீரர்களைக் காயப்படுத்தியிருந்தது. சரியான மருத்துவ வசதிகளோ, கவனிப்போ அற்று அத்தனை போர் வீரர்களும் குற்றுயிராய்க் கிடந்தனர்.
வீரர்களின் மரண ஓலம் ன்றி டுனான்டின் நெஞ்சைப் பிழிந்தது. தான் வந்த நோக்கத்தை மறந்த டுனான்ட், அருகிலிருந்த ஊரின் மக்களை ஒன்று திரட்டி காயமடைந்தோருக்கு உதவி செய்யும் பணிகளில் ஈடுபடலானார்.
இளமையில் என்றி டுனான்ட்
சில நாள் கழித்து தனது சொந்த ஊரான செனீவாவுக்குத் திரும்பினார் டுனான்ட். சோல்ஃபெரினோவின் கோரம் நிறைந்த நினைவுகள் அவரது மனத்தை விட்டு அகலாமல் தொடர்ந்து குடைந்து கொண்டேயிருந்தது. டுனான்ட் தனது அனுபவங்களை ஒரு நூலாக எழுத முடிவு செய்தார். "சோல்ஃபெரினோவின் நினைவுகள்" எனும் தலைப்பிலான அந்த நூலை 1862ல் தனது சொந்த செலவில் அச்சிட்டு வெளியிட்டார் டுனான்ட். தனது நூலை ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் பலருக்கும் அனுப்பி வைத்தார். மேலும், காயமடைந்த வீரர்களுக்கு மருத்துவ உதவி செய்தல், அவ்வாறு உதவும் மருத்துவர்கள், தாதியர் மற்றும் காயமடைந்த போர்வீரர்களுக்கான பாதுகாப்பு போன்ற கோரிக்கைகள் அடங்கிய கடிதம் ஒன்றும் அனுப்பிவைத்தார்.
டுனான்டின் சிந்தனை ஐரோப்பாவெங்கிலும் பாராட்டைப் பெற்றது. பொது நலன்புரி நடவடிக்கைகளுக்கான செனீவா மன்றத்தின் தலைவர் குசுதாவ் மொய்னர், பெப்ரவரி 9, 1863ல் நடந்த மன்றக் கூட்டத்தில் டுனான்டின் நூலை முன்வைத்து உரையாற்றினார். இதன் விளைவாக டுனான்ட், மொய்னர் உட்பட ஐவரடங்கிய குழு அமைக்கப்பட்டு, அனைத்துலக நாடுகளின் ஒப்புதல் பெறும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.
ஆகத்து 22, 1864ம் ஆண்டு சுவிட்சர்லாந்தின் பாராளுமன்றத்தில் 12 நாடுகளின் ஒப்புதலுடன், செனீவா உடன்படிக்கை எனும் பெயரில் ன்றி டுனான்டின் சிந்தனை செயல் வடிவம் பெற்றது. அடுத்துவந்த ஆண்டுகளில் பல்வேறு நாடுகள் இவ்வமைப்பில் இணைந்தன. அமைப்பின் பெயர் "செஞ்சிலுவை மற்றும் செம்பிறைச் சங்கம்" என மாற்றப்பட்டது.
முதல் செனீவா உடன்படிக்கையின் மூலப்பிரதி
அன்றிலிருந்து இன்று வரை செஞ்சிலுவைச் சங்கம் பல்வேறு நாடுகளில், போர்களின் போது மனிதாபிமான உதவிகளை வழங்கும் முன்னணி நிறுவனமாக உள்ளது. செஞ்சிலுவைச் சங்கத்தை தோற்றுவித்தமைக்காக 1901ம் ஆண்டில் ன்றி டுனான்ட் அமைதிக்கான நோபல் பரிசு (இதுவே முதலாவது அமைதிக்கான நோபல் பரிசாகும்.) வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். மேலும், உலகுக்கு அமைதியை நிலைநாட்டும் செஞ்சிலுவைச் சங்கத்தின் முயற்சிகளுக்காக 1917,1944 மற்றும் 1963ம் ஆண்டுகளில் இதற்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
"அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தன்நோய்போல் போற்றாக் கடை"

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று

கிரந்தம் தவிர்ப்போம்

அக்கரைச் சீமையின் அழகு