தனித் தமிழ் இயக்கம்
தமிழ் மொழி உலகின் பழமையான மொழிகளில் ஒன்று. தமிழ் மொழியை எழுதுவதற்கு துவக்க காலத்தில் பயன்பட்ட தமிழ்ப்பிராமி அல்லது தமிழி எழுத்துக்களைத் தாங்கிய பானையோடுகள் மற்றும் கல்வெட்டுக்கள் குறைந்தது 2200 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழ்மொழி எழுத்து மொழியாக வழங்கி வந்ததை உறுதி செய்கின்றன. மேலும், 2000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் மொழியில் இலக்கியங்கள் எழுந்துவிட்டன. கழக இலக்கியங்களின் காலம் பொ.ஊ.மு. 300 - பொ.ஊ. 300 என பரவலாகக் கருதப் படுகிறது. இத்தகைய பழமையும் வளமும் கொண்ட தமிழ்மொழி பிற்காலத்தே பிறமொழிச் செல்வாக்குகளினால் சிதைவுறத் துவங்கியது. கழகக் காலத்தின் பின் தமிழகத்தை ஆண்ட பேரரசுகள் தமிழில் சமக்கிருதச் சொற்களையும் கிரந்த எழுத்துக்களையும் அறிமுகப்படுத்தின. இவற்றின் வரவு தமிழ்மொழியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. தமிழ் தன் இயல்பு சிதைந்து மாறியது. மணிப்பிரவாளம் எனும் புதிய செய்யுள் நடை உருவாகி தமிழ்ப் பாடல்களில் சமக்கிருதச் சொற்கள் பரவலாகப் பயன்படுத்தும் நிலையும் உருவாகியது. இத்தகைய நிலையில் தமிழ் மொழியின் தூய்மையை மீட்கும் வகையில் தமிழறிஞர்கள் பலரது கூட்டு முயற்சியில் உருவானதே தனித் தமிழ் இயக்கம்.
![]() |
தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலை அடிகள் (மூலம்: India Post, Government of India, GODL-India <https://data.gov.in/sites/default/files/Gazette_Notification_OGDL.pdf>, via Wikimedia Commons) |
![]() |
பரிதிமாற் கலைஞர் |
1937ல் ராசாசி தலைமையிலான தமிழ்நாட்டு அரசு கட்டாய இந்தி மொழிக் கற்கையை தமிழ் நாட்டின் அனைத்துப் பள்ளிகளிலும் அறிமுகப்படுத்தியது. தமிழ் ஆர்வலர் பலரும் இத்திணிப்பை சமக்கிருதக் கலப்பின் நீட்சியாகக் கருதினர். நீதிக் கட்சியும், பெரியார் தலைமையிலான சுயமரியாதை இயக்கமும் இம் மொழித் திணிப்பை எதிர்த்துப் போராட்டங்களை முன்னெடுத்தன. இப் போராட்டங்களுக்கு தனித் தமிழ் இயக்கம் முழுமையான ஆதரவை நல்கிக் களம் கண்டது. இத்தகைய பலத்த எதிர்ப்பின் பின்னர் தமிழ்நாட்டு அரசு கட்டாய இந்தி மொழிக் கல்விக் கொள்கையைக் கைவிட்டது.
பின்னைநாளில் பாவேந்தர் பாரதிதாசன், மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் மற்றும் பாவலரேறு பெருஞ்சித்திரனார் போன்றோர் இவ்வியக்கத்தின் தூண்களாக விளங்கி தமிழ்மொழியின் தூய்மையைப் பேணும் முயற்சிகளில் ஈடுபட்டனர். பாவலரேறு பெருஞ்சித்திரனார் தனித்தமிழ் இயக்கத்தின் கருத்துக்களை மக்களிடம் சேர்க்கும் விதமாக தென்மொழி எனும் மாத இதழைத் துவக்கினார். 1984ல் தமிழமல்லன் என்பவரால் புதுச்சேரியில் தனித்தமிழ் மாநாடு நடத்தப்பட்டது. 2010ம் ஆண்டில் புதுச்சேரியில் உள்ள கடைகளின் பெயர்ப் பலகைகளைத் தமிழ்மொழியில் வைக்கவேண்டுமென தனித்தமிழ் இயக்கம் கோரிக்கை விடுத்தது. மேலும், தனித்தமிழ்க் கழகத் தொடக்கப்பள்ளி எனும் பள்ளியும் துவக்கப்பட்டது.
இன்று தமிழ் மொழி தனது தனித்தன்மையைப் பாதுகாத்துக்கொண்டு சமக்கிருதச் செல்வாக்கு நீங்கி செழித்துக் கொண்டிருப்பதற்கு தனித்தமிழ் இயக்கம் மேற்கொண்ட பெருமுயற்சிகளே அடித்தளமாக அமைந்தது. எனவே, நமது அன்றாட வாழ்வில் பிறமொழிக் கலப்பற்ற தூய தமிழைப் பேசவும் எழுதவும் முயற்சி மேற்கொள்வதே தனித்தமிழ் இயக்கத்துக்கு நாம் ஆற்றும் நன்றிக்கடனாக அமையும்.
கருத்துகள்
கருத்துரையிடுக