மன்னன் மனமாற்றம் (பகுதி - 2)

 திருமறைக்காட்டின் முதன்மைத் தெரு வழியே இரு குதிரைகள் பூட்டிய அந்தத் தேர் விரைந்து கொண்டிருந்தது. ஆயினும், அத் தேரில் வீற்றிருந்த மங்கையர்க்கரசி மற்றும் குலச்சிறை ஆகியோரின் நெஞ்சத்து எண்ணங்கள் தேரினும் விரைவாக நகர்ந்துகொண்டிருந்தன. சம்பந்தையர் சோழநாட்டுக்குட்பட்ட திருமறைக்காட்டருகிலுள்ள மாளிகையொன்றில் தங்கியிருப்பதாக மங்கையர்க்கரசி விவரம் பெற்றிருந்தாள். எனவே, அவரைச் சந்திக்கும் பொருட்டு குலச்சிறையையும் துணைக்கழைத்துக் கொண்டு திருமறைக்காட்டுக்குப் புறப்பட்டாள். குலச்சிறையின் மனம் மிகவும் குழம்பியிருந்தது. சம்பந்தையரை மதுரைக்கு வருமாறு இணங்கச் செய்வது எப்படி என்று எண்ணியவாறே மங்கையற்கரசியின் முகத்தை ஏறிட்டார்.

மங்கையற்கரசி: என்ன அமைச்சரே? ஏதேனும் குழப்பமா?

குலச்சிறை: ஆம் தேவி!! சம்பந்தையரிடம் நமது சிக்கலை எவ்வாறு எடுத்துரைப்பது? அவர் நமது திட்டத்துக்கு இணங்குவாரா?

மங்: வீண் கவலை வேண்டாம். சமணர்கள் சொற்கேட்டு நமது மன்னர் கருவூலத்துப் பொருளையெல்லாம் வீணாக்கிக்கொண்டிருப்பதை எடுத்துச் சொல்வோம். சம்பந்தையர் இது போன்ற பல சிக்கல்களை எளிதில் வென்றிருக்கிறார். சோழநாட்டுக்குட்பட்ட பல குறுநில மன்னர்களின் மனதை மாற்றி வைதீக நெறியின் பால் இட்டுச்சென்றுள்ளர். சோழ நாடெங்கும் சமணம் வலுக்குன்றியிருப்பதற்கு மூலவரே சம்பந்தையர்தான்.

குல: அப்படியா தேவி!! இப்பேர்ப்பட்ட அருஞ்செயல்களை அவர் ஒருவரே எவ்வாறு சாதித்தாரோ நானறியேன்.

மங்: அது தான் பார்ப்பனர்களின் தனித்திறமை. வட நாட்டின் மன்னர்களெல்லாம் போற்றி வணங்கும் வண்ணம் அருஞ்செயல் புரிந்திருக்கிறார்கள். சமண மதத்தை நிறுவிய மகாவீரர் பிறந்த வைசாலியும், பௌத்த மதத்தைத் தோற்றுவித்த சித்தார்த்தர் பிறந்த லும்பினியும் இன்று வைதீக நெறி ஓங்கும் நகர்களாக மாறிவிட்டனவே. வட நாட்டு மக்களும் மகாவீரரையும் புத்தரையும் முற்றிலுமாக மறந்துவிட்டனரே!!

குல: உண்மையாகவா!! வடநாட்டிலே சமணம் வலுக்குன்றி விட்டதா!! கேட்பதற்கே வியப்பாயிருக்கிறது. உருவான இடத்திலேயே ஒழிந்து போன சமணம் கண்டிப்பாகத் தென்னாட்டிலிருந்தும் தூர ஓடும் என்ற நம்பிக்கை இப்போது தான் துளிர் விடுகிறது.

மங்: ஆம் அமைச்சரே!! நானே இது பற்றி சில நேரங்களில் எண்ணி வியப்பதுண்டு. மக்கள் தம் மனம் எத்துணை எளிதாக மாற்றமடைகிறது. ஆசையைக் காட்டினால் அறிவு மழுங்கி விடுகிறது.

குல: முற்றிலும் உண்மை தேவி!! எது எப்படியான போதிலும் சரி!! நாமும் பாண்டிய நாட்டினை ஒரு பேரரசாக்கியே தீர வேண்டும்.

இவ்விதம் உரையாடியவாறே குலச்சிறையும் மங்கையர்க்கரசியும் சம்பந்தையரின் மாளிகையை நெருங்கினர். பாண்டிய நாட்டின் அரச மாளிகைக்குச் சற்றும் குறைவில்லாதது போல் அம் மாளிகை மிளிர்வது கண்டு வியந்தனர். தேர் மாளிகையை அடைந்ததும் ஏவலாளர் சிலர் அத் தேரை நோக்கி விரைந்தனர். அவர்களில் ஒருவன் மங்கையர்க்கரசியைக் கண்டதும் தலைதாழ்த்தி வணங்கினான். ஏனையோரும் அவ்வாறே வணங்கினர். மங்கையர்க்கரசியார் ஏவலாளர் தலைவனை நோக்கி சம்பந்தையரைக் காண வேண்டி வந்திருப்பதாகக் கூறினார். அவனும் உடனே ஏவலாளரில் ஒருவனை அனுப்பி சம்பந்தையரிடம் தகவலைக் கூறி அனுமதி பெற்று வர அனுப்பினான். சற்று நேரத்துக்கெல்லாம் ஏவலாளன் திரும்பி வந்து சம்பந்தையர் அனுமதி அளித்ததாகத் தெரிவித்தான்.

மங்கையர்க்கரசியும் குலச்சிறையும் தேரிலிருந்து இறங்கி மாளிகையை நோக்கிச் செல்லலாயினர். மாளிகை நெடுகிலும் வேலையாட்கள் பலர் பணியிலீடுபட்டிருந்தனர். மாளிகையிலிருந்து சற்றுத் தொலைவில் சிவலிங்கம் அமைந்த கோவிலொன்று காணப்பட்டது. அதன் முன்றிலில் பால் நிறைந்த குடங்கள் பல காட்சி தந்தன. குலச்சிறை வியப்பு மேலீட்டால் மங்கையற்கரசியை நோக்கவும் அவள் கையமர்த்திப் பின்னர் விவரிப்பதாகச் சைகை செய்தாள். மாளிகையை அடைந்ததும் வடமொழிப் பாடல்களின் ஒலி கேட்கத் தொடங்கியது. மாளிகை வாசலில் நின்றிருந்த வாயிற் காப்போன் இருவரையும் சற்று நேரம் பொறுத்திருக்குமாறு கேட்டுக் கொண்டான். மங்கையற்கரசியும் குலச்சிறையும் வாசலில் காத்திருந்தனர். சிறிது நேரத்தின் பின் பாடல் ஒலி அடங்கியது. வாயிற்காப்போன் இப்போது இருவரையும் உள்ளே செல்லுமாறு சைகை செய்தான். மங்கையர்க்கரசியும் குலச்சிறையும் மாளிகைக்குள் நுழைந்தனர். மாளிகையின் உட்புறம் புகை மூட்டமாக இருந்தது. அப் புகை மூட்டத்தின் நடுவே அமைந்திருந்த தீக்குண்டத்தைச் சூழ மூவர் அமர்ந்திருந்தனர். அவர்கள் மூவரும் பின் குடுமி தரித்து முன் மயிரை மழித்திருந்தனர். மஞ்சள் துகிலுடுத்து கழுத்தில் மணி மாலைகளை அணிந்திருந்தனர். அவர்களில் நடுவிலமர்ந்திருந்தவர் இருவரையும் பார்த்துப் புன்னகைத்தார். மற்ற இருவரிடமும் அவர் ஏதோ கூறிவிட்டு இவர்களிருவரையும் நோக்கி வந்தார். மங்கையர்க்கரசி மெதுவாகக் குலச்சிறையிடம் "இவர்தான் சம்பந்தையர்" என்று முணுமுணுத்தாள்.

சம்பந்தையர் மங்கையர்க்கரசியை நோக்கி கையை உயர்த்தி ஆசீர்வதித்த பின்னர், பேசத்தொடங்கினார்.

சம்பந்தையர்: மங்கையர்க்கரசியே!! நலமாக உள்ளாயா? நீ வாசம் புரியும் பாண்டிய தேசமும் உன் பதியாகிய அரிகேசரி மாறவர்மனும் நலமா?

மங்கையர்க்கரசி: நான் நலம் சுவாமி!! என்னாடும் வேந்தனும் நலமே.

சம்: நல்லது. நீ என்னை நாடிவந்த நோக்கம் என்னவோ? ஏதேனும் காரிய சித்தி வேண்டி வந்தனையோ?

மங்: ஆமாம் சுவாமி!! என் மனம் குழப்பமடைந்துள்ளது. தங்களிடம் என் மனக்குறையைத் தெரிவித்து அது தீர வழி நாடி வந்தேன்.

சம்: அப்படியா நல்லது!! உன்னுடன் வந்திருக்கும் இந்த மனிதர் யாரோ?

மங்: இவர் பாண்டிய நாட்டு அமைச்சர் குலச்சிறை.

(குலச்சிறை சம்பந்தையரை வணங்குகிறார்.)

சம்: மகனே! மங்களம் உண்டாகட்டும். (மங்கையற்கரசியைப் பார்த்து) இங்கே விஷயங்களை சம்பாஷணை செய்வது உசிதமல்ல. ஆலோசனை மண்டபத்துக்குச் செல்வோம்.

மங்: தங்கள் விருப்பம் சுவாமி!!

சம்: சரி என்னைப் பின் தொடர்ந்து வாருங்கள்

மங்கையர்க்கரசியும் குலச்சிறையும் சம்பந்தையரைப் பின்தொடர்ந்து சென்றனர். சற்று நேரத்தின் பின் ஆலோசனை மண்டபத்தை அடைந்தனர். சம்பந்தையர் அவ்வறையின் நடுவிலமைந்த உயர்ந்த இருக்கையில் அமர்ந்தார். மங்கையர்க்கரசியையும் குலச்சிறையையும் அருகிலமைந்த இரு சிறு இருக்கைகளில் அமருமாறு கூறினார். இருவரும் இருக்கைகளில் அமர்ந்தனர். சம்பந்தையர் சிறிது நேரம் கண்ணை மூடி வட மொழியில் ஏதோ முணுமுணுத்தார். பின்பு, இருவரையும் பார்த்துப் பேசத் தொடங்கினார்.

சம்: இப்போது சொல்லுங்கள். தங்கள் பிரச்சினை என்ன? எதற்காக என்னைச் சந்திக்க வந்துள்ளீர்கள்?

மங்: சுவாமி!! என் மனத்தில் ஒரு சிக்கல் எழுந்து என்னைக் குடைகிறது.

சம்: என்ன சிக்கல். என்னிடம் சொன்னால் ஏதேனும் உபாயம் சொல்ல முயற்சிக்கிறேன்.

மங்: சுவாமி!! பாண்டிய நாட்டில் சமண மதம் பெரும் செல்வாக்குப் பெற்றுத் திகழ்கிறது. மன்னனும் சமண மதத்துக்குத் தன் முழு ஆதரவை நல்கியுள்ளார்.

சம்: அது எனக்கும் தெரிந்த விஷயம் தான். பல்லவ தேசத்திலும் பாண்டிய தேசத்திலும் சமண மதம் சிறப்பாக விளங்கியது. பல்லவ தேசத்தில் தற்போது வைதீகம் தலையெடுக்கத் தொடங்கி விட்டது. ஆனால், பாண்டிய தேசம் இன்னும் சமணத்தைப் போற்றி வருகிறது.

மங்: ஆமாம் சுவாமி!! அது தொடர்பாகவே தங்களைச் சந்திக்க வந்தோம்.

சம்: என்னிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

மங்: சுவாமி!! இந்த சமணர்களின் தொல்லையைப் பொறுக்க முடியவில்லை. அன்பு, கொல்லாமை போன்ற கருத்துக்களை மக்களிடையே விதைக்கின்றனர். நாட்டின் கருவூலத்தின் பொன்னும் பொருளும் சமணர் கற்பிக்கும் பள்ளிகளுக்கே செலவிடப்படுகிறது. மன்னனும் போர்களில் ஈடுபட்டு நாட்டை விரிவாக்கும் எண்ணம் இன்றி மக்களுக்கு கல்வி புகட்டும் சமணர் பக்கம் நிற்கிறார்.

சம்: என்ன செய்வது? உத்தர பாரதத்திலே மகாராஜாக்கள் என் போன்ற ப்ராமணர்களின் சொற்கேட்டு நடப்பதால் இப்போது சாம்ராஜ்ஜியங்களுக்கு அதிபதியாக இருக்கிறார்கள். பல்லவனும் தற்போது நம் உதவி நாடி நிற்பதால் அவன் தேசமும் விரிவாகி வருகிறது. பல்லவ சாம்ராஜ்ஜியம் விரைவில் உதயமாகும்.

குல: நாங்களும் அதே எண்ணம் கொண்டே தங்களை நாடி வந்தோம். பாண்டிய நாடும் விரைவில் பேரரசாக மாறவேண்டும். இதுவே எம்மிருவரினதும் பேரவா.

சம்: ஆனால், அது சாத்தியமாகும் என்று நான் எண்ணவில்லை. பாண்டிய ராஜன் அத்தகைய சிந்தனையுள்ளவனாகத் தென்படவில்லையே?

மங்: உண்மை சுவாமி!! ஆனால், தாங்கள் அருள் செய்தால் இந்நிலை மாறும்.

சம்: நான் என்ன செய்யமுடியும்?

மங்: சுவாமி!! தொண்டை நாட்டரசன் மனம் மாறியது போல் பாண்டிய மன்னரின் மனத்தையும் மாற்றவேண்டும். அவரினுள்ளே பேரரசுக்கான ஆசையை விதைக்க வேண்டும். அதற்குத் தங்களின் வைதீக நெறியை மன்னர் ஏற்கும்படி செய்யவேண்டும்.

சம்: (சற்று நேரம் மௌனமாயிருந்த பின்) ம்ம்ம்!! எனக்குப் புரிகிறது. தங்கள் சித்தப்படியே நானும் செயல்படத் தீர்மானித்து விட்டேன். நிச்சயம் என்னாலான முயற்சியைச் செய்து பாண்டிய ராஜனின் மனத்தை மாற்றிக் காட்டுகிறேன்.

குல: மிக்க நன்றி சுவாமி!! பாண்டிய நாட்டில் தங்கள் வரவை ஆவலுடன் எதிர்பார்த்து நிற்கிறோம்.

(மங்கையர்க்கரசியும் ஆமோதிப்பது போல் தலையசைக்கிறாள்)

சம்: நல்லது. ஒரு புண்ய தினத்திலே பாண்டிய தேசத்தின் மதுரைக்கு எனது பரிவாரங்களுடன் விஜயம் செய்வேன். வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யுங்கள்.

(மங்கையர்க்கரசியும் குலச்சிறையும் ஒருமித்து): அப்படியே சுவாமி!! நாங்கள் விரைந்து ஏற்பாடுகளை மேற்கொள்கிறோம்.

மங்: என் மனக்குறை தீர்ந்தது சுவாமி!! நாங்கள் விடை பெற அனுமதியளியுங்கள்

(மங்கையர்க்கரசி சம்பந்தையரின் கால்களில் விழுகிறாள். குலச்சிறையும் அதைக் கண்டு அவ்வாறே செய்கிறார்)

சம்: மங்களம் உண்டாகட்டும். சென்று வாருங்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று

கிரந்தம் தவிர்ப்போம்

அக்கரைச் சீமையின் அழகு