மன்னன் மனமாற்றம் (பகுதி - 1)

அமைச்சர் குலச்சிறைக்குத் தூக்கம் கொள்ளவில்லை. ஒரு பெரும் சிக்கல் அவர் மனத்தைக் குடைந்து கொண்டிருந்தது. பள்ளியறையில் இருக்கப் பிடிக்காமல் அரண்மனைப் பூந்தோட்டத்துக்குச் சென்று சிறிது நேரம் உலாவி விட்டு வரலாம் எனக் கருதிப் பூந்தோட்டப் பக்கம் நடக்கலானார். பூந்தோட்டத்தை நெருங்கும் வேளையில் அங்கே ஏற்கனவே வேறொருவர் நடமாடிக் கொண்டிருப்பது தெரிந்தது. குலச்சிறையும் சற்றே வியப்புடன் அந் நபரை நோக்கி நடந்தார். சற்றுத் தூரம் சென்றதும் அது ஒரு பெண் என்பது புலனாயிற்று. குலச்சிறைக்கு எதுவும் புரியவில்லை. அரண்மனைப் பூந்தோட்டத்தில் இந்த இரவு வேளையில் உலவுவது யாராயிருக்கும்? என்ற எண்ணத்துடன் அப்பெண்ணை நெருங்கினார். குலச்சிறையின் காலடி ஓசையை உணர்ந்து அப் பெண் குலச்சிறை வரும் திசையில் திரும்பினாள். அப்பெண்ணைக் கண்டதும் குலச்சிறை உடனே இருகரம் கூப்பி வணக்கம் செலுத்தினார். பாண்டிமாதேவி, சோழர்குலக் கொழுந்து, பாண்டிய நாட்டின் பட்டத்தரசியான மங்கையர்க்கரசி அங்கே நின்றுகொண்டிருந்தாள்.

குலச்சிறை: பாண்டிமாதேவிக்கு அடியேனின் வணக்கங்கள்!!

மங்கையர்க்கரசி: வணக்கம் அமைச்சரே!!

குல: தேவி!! இவ்விரவு வேளையில் தாங்கள் பூந்தோட்டம் வரை வரக் காரணமென்ன? தங்கள் முகம் வாட்டமாயிருக்கிறதே?

மங்: ஆம் அமைச்சரே!! மனம் வாடியிருந்தால் முகமும் வாடுவது இயற்கை தானே!!

குல: எல்லா வளமும் படைத்த சோழநாட்டின் புதல்வியும், தென்திசையாளும் பாண்டியன் தேவியுமான தங்களுக்கு கவலையா? தாங்கள் இந்திர லோகத்து பாரிசாதம் வேண்டினாலும் அதை நொடிப்பொழுதில் அடையலாமே.

மங்: யான் வேண்டுவது அதுவன்று அமைச்சரே!! இது அடைதற்கரியது போல் தோற்றுகிறது.

குல: தங்களால் அடைய முடியாததும் உண்டோ?

மங்: அமைச்சரே!! தாங்கவொண்ணாத் துயரம் என் நெஞ்சில் குடி கொண்டிருக்கிறது. இப் பாண்டிய நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடுமோ என அச்சம் கொள்கிறேன்.

குல: என்ன தங்கள் பதியாகிய அரிகேசரி மாறவர்மர் வீரத்துக்கு முன்பு இந்திரனும் தோற்றோடுவானே? அப்படியிருக்க இதுவோர் பொருளற்ற கவலையல்லவா?

மங்: மன்னரின் திறத்தில் எனக்கு எள்ளளவும் ஐயமில்லை. ஆயினும், அவரின் பெருந்தன்மை குறித்தே நான் கவலையடைந்துள்ளேன்.

குல: அதிலென்ன சிக்கல் தேவி? குடிகள் குறை தீர்ப்பது வேந்தன் கடமை தானே?

மங்: குறைகள் தீர்க்கப்பட வேண்டியது தான். எனினும், அரசைக் காப்பாற்றிக் கொள்வது அதனினும் முக்கியமல்லவா?

குல: தாங்கள் என்ன கூற வருகிறீர்கள் என்று புரியவில்லையே?

மங்: கூறுகிறேன் அமைச்சரே!! வட நாட்டின் பேரரசுகள் பற்றித் தாங்கள் அறிந்திருகிறீர்களா?

குல: ஆம் தேவி!! குப்தர்களைப் பற்றியும் சாதவாகனர்களைப் பற்றியும் சிறிது கேள்விப்பட்டுள்ளேன்.

மங்: அப் பேரரசுகள் எல்லாம் இப்படிப் பரந்த நிலப்பரப்பை ஆளுவதன் இரகசியம் என்னவென்று அறிவீரா?

குல: நானறியேன் தேவி

மங்: கேளும் அமைச்சரே!! வட நாட்டில் புதுமையானதொரு மதமுண்டு. வைதீக நெறி என்று பெயர் கொண்டது. வேதங்கள், புராணங்கள் எனும் நூல்களின் அடிப்படையில் அமைந்தது. பார்ப்பனர் எனும் கூட்டத்தார் அச்சமய நெறிப்படி உயர்நிலையில் வைத்துப் போற்றப்படுகின்றனர்.

குல: நானும் கேள்விப்பட்டிருகிறேன் தேவி!! முன்னொரு நாளில் பார்ப்பனரில் சிலர் நம் தமிழக நிலத்துக்கு வந்து அவர்தம் மதத்தைப் பரப்ப முயற்சித்தனர். ஆயினும், வட நாட்டிலிருந்து வந்த பௌத்தத்தையும் சமணத்தையும் போல் அது மக்களிடையே செல்வாக்குப் பெறவில்லையே?

மங்: உண்மை!! நம் மக்கள் பிறப்பிலே உயர்வு தாழ்வு கற்பிக்கும் அம் மதத்தை வெறுத்தொதுக்கி விட்டனர். வட நாட்டிலிருந்து வந்து தங்கிவிட்ட பார்ப்பனரிடையேயும் அவரால் கவரப்பட்ட ஒரு சில தமிழரிடையேயும் தான் அம் மதம் புழங்கி வருகிறது.

குல: அதனால் நமக்கென்ன பலன் தேவி? அது எப்படிப் பேரரசாளும் நமது ஆசைக்கு உதவும்?

மங்: கேளுங்கள் அமைச்சரே!! எனது சோழ நாட்டில் இந்தப் பார்ப்பனரின் எண்ணிக்கை சற்று அதிகம். அதனால், சோழநாட்டில் வைதீக மதத்துக்கு ஓரளவு செல்வாக்கு உண்டு. பார்ப்பனரது நூல்களாகிய வேதங்கள் பற்றியும் நான் சற்று அறிவேன். மேலும், இவ் வேதங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட மனுஸ்மிருதி எனும் ஓர் நூலையும் பார்ப்பனர் போற்றிப் பாதுகாக்கின்றனர். இந்த மனுஸ்மிருதியிலே பல விடயங்கள் உண்டு. பார்ப்பனர் மக்களை நான்கு வர்ணங்களாகப் பிரித்து நோக்குகின்றனர்.

குல: நான்கு வகைகளா? அது எப்படி? மக்களை எப்படி வகைப்படுத்துவது? வாழும் நாட்டெல்லை அடிப்படையிலா அல்லது பேசும் மொழி அடிப்படையிலா? அப்படிப் பார்த்தாலும் இவ்வுலகில் நாமறிய நூற்றுக்கணக்கான நாடுகளும், பல்வேறு மொழிகளும் உண்டல்லவா? மேலும் நாமறியாத எத்தனையோ நாடுகளும் மொழிகளும் இருக்கக் கூடுமல்லவா?

மங்: நாடோ மொழியோ அல்ல அமைச்சரே!! இப் பிரிப்பு பிறப்பின் அடிப்படையிலானது.

குல: பிறப்பின் அடிப்படையில் மனிதரைப் பிரிப்பதா? அது எவ்வாறு சாத்தியம்?

மங்: கேளும் அமைச்சரே!! மனுஸ்மிருதியின் படி ஒரு குறித்த தொழிலைச் செய்பவன் தன் மகனையும் அதே தொழிலில் ஈடுபடுத்த வேண்டும். இதன்படி, ஒரு குறித்த குடி ஒரு குறிப்பிட்ட தொழிலை குடித்தொழிலாய் மேற்கொள்ள வேண்டும்.

குல: இது சாத்தியமில்லையே? தமிழகத்திலே குயவர்கள் புலவர்களாயும் இருந்திருக்கிறார்களே? மாடு மேய்ப்போர் அரசாண்டிருக்கிறார்களே?

மங்: உண்மை அமைச்சரே!! அதுதான் நமது சிக்கலே. "எல்லோரும் நாடாளலாம். எல்லோரும் படிக்கலாம்." என்று இருந்துவிட்டால் நாம் எப்படி அரசுரிமையில் தனியுரிமை கொண்டாடுவது? அரசுரிமை குறித்த சிலருக்கே, கல்வியும் அவர்க்கே ஏனையோர்க்கு அதில் உரிமையில்லை என்று இருந்தால்தானே நாமும் நமது சந்ததியும் தொடர்ந்து நாடாளமுடியும்? இருக்கும் பொருளெல்லாம் பொதுவென்று வைத்தால் படைநடத்தி அண்டை நாடுகளைப் பிடிப்பது எப்படி? சங்க காலத்தைப் போல் ஆயிரம் நாடு ஆயிரம் மன்னர் அவர்க்குள்ளே அடிதடி என்று தமிழகம் குறுகிப் போய் விடுமே!!

குல: தாங்கள் சொல்வதும் சரிதான் தேவி!! ஒருவனுக்கே உரிமையென்று சொன்னால்தான் அதிகாரங்கள் எம்மிடம் குவியும்.

மங்: முற்றிலும் உண்மை. நாமும் ஓர் பாண்டியப் பேரரசை உருவாக்க வேண்டுமானால் இந்த வைதீக மதத்தைப் பற்றுவதுதான் ஒரே வழி.

குல: ஆனால், வைதீக மதத்தைப் பரப்புவது எப்படி? சமண மதம் நம் நாட்டிலே தழைத்தோங்கி வருகிறதே? மேலும் சமணத் துறவிகள் மக்களிடையே அன்பையும் சகிப்புத்தன்மையையும் பரப்பி வருகிறார்கள். சமணர் நடத்தும் பள்ளிகளிலே எந்தப் பிரிவினையும் இல்லாது நம் நாட்டின் அனைத்துப் பிரிவுகளிலிருந்தும் குழந்தைகள் கல்வி பயில்கின்றனர். மக்கள் அறிவுடையோராய் மிளிர்கின்றனர். அனைத்திலும் மேலாக நமது பாண்டிய மன்னன் சமண மதத்துக்குப் பேராதரவு நல்குகிறார். சமணப் பள்ளிகளை நடத்திச் செல்லப் பொருளுதவி நல்குகிறார். சமணத் துறவிகளின் அறிவுரையைக் கேட்டு ஆராய்ந்து முடிவு எடுக்கிறார். மேலும், அவரிடம் பேரரசு அமைக்கும் ஆர்வமும் காணப்படவில்லையே?

மங்: இது சவாலான செயல்தான். இருந்தாலும் நாம் முயற்சித்துப் பார்க்கலாமே?

குல: சரி. தங்கள் திட்டம் தான் என்னவோ?

மங்: அமைச்சரே!! எமது சோழ நாட்டில் சம்பந்தையர் எனும் ஓர் பார்ப்பனர் வாழ்கிறார். அவர் மீது சோழ மன்னர் பெருமதிப்பு வைத்துள்ளார். அவரது சொற்கேட்டு பல சமணப் பள்ளிகளை அழித்து சிவாலயங்களை உருவாக்கி வருகிறார். சோழநாட்டில் வைதீக மதம் தழைக்கத் தொடங்கி விட்டது. நமக்கு முன்பே அதுவோர் பேரரசாய் எழுச்சி பெற்றாலும் வியப்பதற்கில்லை.

குல: அப்படியா!! நாம் சம்பந்தையரைச் சந்தித்து நமது சிக்கலை எடுத்துச் சொன்னாலென்ன? அவர் நமக்கு உதவக்கூடுமல்லவா?

மங்: மிகவும் சரி அமைச்சரே!! என் உள்ளக் கிடக்கையை அப்படியே வெளிப்படுத்தி விட்டீர்கள். சம்பந்தையரின் இருப்பிடம் எனக்குத் தெரியும். நாம் இருவரும் சென்று அவரைச் சந்தித்தால் நம் குழப்பங்கள் தீரும்.

குல: அப்படியானால் நாளையே நாம் புறப்படலாம். தாங்கள் சம்மதித்தால் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து விடுகிறேன்.

மங்: நல்லது அமைச்சரே!! அப்படியே செய்யும். இப்போது தான் என் மனவருத்தம் சற்று நீங்கியது. நான் தூங்கச் செல்கிறேன்.

குல: சரி தேவி!! நானும் விடை பெற்றுக் கொள்கிறேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று

கிரந்தம் தவிர்ப்போம்

அக்கரைச் சீமையின் அழகு