தமிழ்த் தாத்தா

 ஏட்டுச் சுவடிகளிலேயே செல்லரித்து மடிந்து போயிருக்க வேண்டிய பல்வேறு பழந்தமிழ் நூல்களைத் தேடிப் பதிப்பித்துத் தமிழுக்குப் பெருந்தொண்டாற்றியவர் 'தமிழ்த் தாத்தா' என்று அன்போடு அழைக்கப்படும் உ. வே. சாமிநாதன். ஐம்பெரும் காப்பியங்களில் சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, மணிமேகலை ஆகிய மூன்றும், பத்துப்பாட்டு நூல்கள் அனைத்தும், எட்டுத்தொகை நூல்களில் புறநானூறும் சாமிநாதனின் பெருமுயற்சியால் ஏட்டுச் சுவடிகளிலிருந்து அச்சுக்கூடமேறின. இவைதவிர பல்வேறு வெண்பா, அந்தாதி, தூது, உலா, பரணி வகை நூல்களையும் தேடிப் பதிப்பித்தார். இவர் அச்சிட்ட நூல்களின் எண்ணிக்கை 90ஐத் தாண்டுகின்றது.

இந்நூல்களுக்கான மூலச் சுவடிகளைப் பெறுவதற்காக ஊர் ஊராகப் பயணப்பட்டு பல இடர்களைச் சந்தித்து அயராது முயற்சி செய்து வெற்றி கண்டவர். ஏட்டுச் சுவடிப் பிரதிகளைச் சேகரித்து செல்லரித்த பிரதிகளிலே எழுதியிருப்பது இன்னதென்று உணர்ந்து பல்வேறு பிரதிகளை ஒப்புநோக்கிச் சரியானது இன்னதென்று தேர்ந்து பதிப்பிப்பதென்பது அத்தனை இலகுவான செயலல்ல.

தேடல் ஒருவகை இடர் என்றால், சுவடிகளிலே எழுதியிருப்பது இன்னதென்று அறிவது அதனினும் சிக்கலானது. எழுத்துக்களில் குறில், நெடில் வேறுபாடு இருக்காது. மெய்யெழுத்துக்கும் உயிர்மெய்யெழுத்துக்கும் வித்தியாசம் காண்பது கடினம். கொம்பு எது சுழி எதுவென்று அறிவதும் கடினம். (பழைய தமிழி எழுத்துக்களில் குறில் நெடில் வேறுபாட்டுக்கு மெய்யெழுத்துக்கள் போலவே புள்ளி வைக்கும் முறை பயன்பட்டு வந்தது. ஆயினும் ஓலைச் சுவடிகளில் எழுதும் போது ஓலை கிழிதல், முன்புறம் வைக்கும் புள்ளி ஓலையின் பின்புறமும் தோன்றுதல் போன்ற காரணங்களால் புள்ளி வைத்தல் தவிர்க்கப்பட்டது) இப்படியான இடங்களில் மிகவும் கவனமாக செய்யுளை ஆராய்ந்து பதிப்பிக்கவேண்டியிருக்கும். எழுத்துக்களை இனங்காண்பது போலவே சில இடங்களில் சொற்களுக்குப் பொருளறிவதும் சிக்கல் நிறைந்தது. இவ்வாறான இடைஞ்சல்களையெல்லாம் கடந்து சாமிநாதன் அவர்கள் செய்த தமிழ்த்தொண்டே நம் பழந்தமிழ் இலக்கியங்கள் இன்றும் உயிர்வாழக் காரணம். தமது தமிழ் நூற்பதிப்பு அனுபவங்களை சாமிநாதன் அவர்கள் எழுதிய தமது சுயசரிதை நூலாகிய 'என் சரித்திரம்' எனும் நூலில் குறிப்பிடுகிறார்.

உ. வே. சாமிநாதன்

சாமிநாதன் அவர்கள் பதிப்பித்த முதல் நூல் ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சீவக சிந்தாமணி. இக் காப்பியத்தைப் பதிப்பிக்கும் போது பல இடங்களில் சாமிநாதனவர்கள் இடர்ப் பட்டிருக்கிறார். எடுத்துக்காட்டாக சீவக சிந்தாமணியில், காந்தருவதத்தையை வீணைப் போட்டியில் வெல்பவர் அவளை மணக்கலாம் என்று அறிவிக்கிறான் கட்டியங்காரன். அப்போட்டியில் சீவகன் வென்று காந்தருவதத்தையை அடைகிறான். பொறாமை கொண்ட கட்டியங்காரன் போட்டியிடவந்திருந்த ஏனைய மன்னர்களை ஏவி சீவகனைக் கொல்ல முயல்கிறான். சீவக சிந்தாமணியின் காந்தருவதத்தையார் இலம்பகத்தில் 741 வது பாடலாக இடம்பெறும்

வெள் இலை வேல் கணாளைச் சீவகன் வீணை வென்றான்

ஒள்ளியன் என்று மாந்தர் உவாக் கடல் மெலிய ஆர்ப்பக்

கள்ளரால் புலியை வேறு காணிய காவல் மன்னன்

உள்ளகம் புழுங்கி மாதோ உரைத்தனன் மன்னர்க்கு எல்லாம்

எனும் பாடலில் திருத்தக்க தேவர் இதனைக் காட்டுகிறார். இப் பாடலில் "கள்ளரால் புலியை வேறு காணிய" எனும் வரியில் சீவக சிந்தாமணி ஆசிரியர் திருத்தக்க தேவர் என்ன கூறுகிறார் என்பதை சாமிநாதரால் கண்டுபிடிக்க முடியவில்லை. 1887ல் வெளியிடப்பட்ட சீவக சிந்தாமணி முதற்பதிப்பில் இவ்வரிக்கான பொருள் தவிர்க்கப்பட்டிருந்தது.

சாமிநாதன் வாழ்ந்த கும்பகோணத்தில் இவரது வீட்டுக்கருகில் சாமப்பா என்ற முதியவரொருவர் வாழ்ந்து வந்தார். ஓய்வு நேரங்களில் உ.வே. சா வின் வீட்டுக்கு வந்து அவருடன் உரையாடுவார். ஒருநாள் அவ்வாறு உ.வே.சா வீட்டுக்கு வந்த அந்த முதியவர் தன்னுடைய சொந்தச் சிக்கல் பற்றிப் பேசத்தொடங்கினார். தனக்கு வேண்டாத நபரொருவர் இன்னொருவரிடம் தன்னைப் பற்றி தவறாகக் கூறி கோள் மூட்டிவிட்டது பற்றிக் கூறி "எப்படியாவது நாங்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்ளவேண்டுமென்று அவன் எண்ணுகிறான். நாங்கள் இருவருமே அவனுக்கு வேண்டாதவர்கள் தான். அதற்குத்தான் கள்ளா வா! புலியைக் குத்து!! என்கிறான். நானா ஏமாறுவேன்?" என்றார். வேண்டாவெறுப்பாகக் கேட்டுக்கொண்டிருந்த உ.வே.சா. வுக்கு "கள்ளா வா!! புலியைக் குத்து!!" என்ற சொற்களைக் கேட்டதும் உற்சாகம் பற்றிக் கொண்டது. கிழவரிடம் அதன் பொருளென்ன என்று வினவினார். கிழவரும் "அது ஒரு பழமொழி" என்று கூறி அது பற்றிய ஒரு கதையைக் கூறலானார். ஒரு வழிப்போக்கன் மடியில் பணத்தோடு காட்டு வழியில் போய்க்கொண்டிருந்தான். இடையில் ஒரு திருடன் அவனை வழிமறித்து அவன் பணத்தைத் திருட முற்பட்டான். வழிப்போக்கனோ திருடனிடமிருந்து தப்பிக்க காட்டுவழியில் ஓடினான். ஆனால், எதிரே ஒரு புலி வந்தது. முன்னால் புலி!! பின்னால் திருடன்!! இவர்கள் இருவரையும் சமாளிக்கும் வகையில் வழிப்போக்கனுக்கு ஒரு சூழ்ச்சி தோன்றியது. உடனே திருடனிடம் போய் புலியைக் கொன்றுவிட்டால் தனது பணத்தைத் தந்துவிடுவதாக ஆசை காட்டினான். உடனே திருடனும் அதை நம்பி புலியுடன் சண்டையிட்டான். ஆனால் இருவரும் மடிந்து போக வழிப்போக்கன் தப்பித்து ஓடிவிட்டான்.

இந்தக்கதையைக் கேட்டதும் உ.வே.சா மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தார். சிந்தாமணிப் பாடலின் பொருளும் விளங்க ஆரம்பித்தது. சீவகனிடம் பொறாமை கொண்ட கட்டியங்காரன் ஏனைய மன்னர்களை வைத்து சீவகனைக் கொல்ல முயல்கிறான். இந் நிகழ்வை "கள்ளராற் புலியை வேறு காணல்" எனும் உவமையைப் பயன்படுத்தி சீவகனைக் கள்வனுக்கும் புலியை மன்னர்களுக்கும் உவமானமாக்கி விளக்கியிருக்கிறார் திருத்தக்கதேவர். 1907ல் வெளியிட்ட சீவக சிந்தாமணியின் இரண்டாம் பதிப்பில் சாமிநாதனவர்கள், "கள்ளராற் புலியை வேறு காணல்" என்பது ஒரு பழமொழி என்று கூறி இந்த விளக்கத்தைச் சேர்த்தார்.

இன்னொரு பாடலாகிய நாமகள் இலம்பகத்தில் 14 வது பாடலாகிய

பொன் துஞ்சு மார்பன் புனல் ஆட்டிடை புன்கண் எய்தி

நின்று எஞ்சுகின்ற ஞமலிக்கு அமிர்து ஈந்தவாறும்

அன்றை பகலே குணமாலையை அச்சுறுத்த

வென்றி களிற்றை விரிதார் அவன் வென்றவாறும்

எனும் பாடலுக்கான நச்சினார்க்கினியார் உரையின் விளக்கம் காண அவர் மேற்கொண்ட முயற்சியும் குறிப்பிடத்தக்கது. தனது சுய சரித நூலில் உ. வே. சா. அவர்கள் அந்நிகழ்வைப் பின்வருமாறு பதிவு செய்கிறார்.

ஓரிடத்திலே "திருத்தங்கு மார்பன் புனலாட்டிலே உயிர் போகின்ற ஞமலிக்குத் தானும் வருந்திப் பஞ்சாட்சரமாகிய மந்திரத்தைக் கொடுத்தபடியும்" என்று இருந்தது. ‘இது ஜைன நூலாயிற்றே; பஞ்சாட்சர மந்திரம் இங்கே எப்படிப் புகுந்துகொண்டது?’ என்ற சந்தேகம் வந்தது. மூலத்தில் “ஞமலிக் கமிர் தீர்ந்தவாறும்” என்று இருக்கிறது. ‘அமிர்து’ என்பதற்கு, ‘பஞ்சாட்சரமாகிய மந்திரம்’ என்பது உரையாக இருந்தது. ‘மந்திரத்தை யென்றிருந்திருக்க வேண்டும்: யாரோ பிரதியைப் பார்த்து எழுதின சைவர் பஞ்சாட்சரம் என்று சேர்த்தெழுதி விட்டார்’ என்று முதலில் கருதினேன். பின்னாலே வாசித்து வருகையில் “ஐம்பத வமிர்த முண்டால்” (946) என்று வந்தது. வேறிடங்களில் உள்ள உரையால் பஞ்ச நமஸ்கார மந்திரமென்று தெரிந்தது. ஜைன நண்பர்களை விசாரித்தேன். அவர்கள் மிகவும் எளிதில், “அருகர், ஸித்தர், ஆசாரியர், உபாத்தியாயர், ஸாதுக்களென்னும் பஞ்ச பரமேஷ்டிகளை வணங்குதற்குரிய ஐந்து மந்திரங்களைப் பஞ்ச நமஸ்காரமென்று சொல்வது ஸம்பிரதாயம்” என்று தெளிவுறுத்தினார்கள்.

இதே போன்று நாமகளிலம்பகம் 58ம் செய்யுளில் காணப்பட்ட 'ஏக்கழுத்தம்' எனும் சொல்லுக்கான பொருளை அறிந்தவாற்றைப் பின்வருமாறு பதிவு செய்கிறார்.

நாமகளிலம்பகம் 58-ஆம் செய்யுளில், “ஏத்தரு மயிற்குழா மிருந்த போன்றவே” என்னும் அடிக்கு, ‘மேல் நோக்குதலைத் தருகின்ற மயிற்றிரள் பொலிந்திருந்தனவற்றை யொத்த வென்க’ என்று நச்சினார்க்கினியர் உரை யெழுதிவிட்டு, ‘ஏக்கழுத்தம் என்றார் பிறரும்’ என்று மேற்கோள் காட்டுகிறார். அந்தச் செய்யுளும் உரையும் அச்சாகும்போது ‘ஏக்கழுத்தம்’ என்ற சொல் எங்கே வந்துள்ளதென்று என் ஞாபகத்துக்கு வரவில்லை. அதை என் கைக் குறிப்புப் புஸ்தகத்தில் எழுதி வைத்துக் கொண்டேன். திடீரென்று ஒருநாள் சிறுபஞ்ச மூலத்தில் ஒரு பாடல் ஞாபகத்துக்கு வந்தது.

“கல்லாதான் றான்காணு நுட்பமுங் காதிரண்டும்

இல்லாதா னெக்கழுத்தஞ் செய்தலும்”

என்பது அதன் முதற்பகுதி. அதில் வரும் எக்கழுத்தமென்ற சொல்லுக்குத் தெளிவாகப் பொருள் விளங்கவில்லை. சிந்தாமணி உரையில் வரும் மேற்கோள்கள் அவ்வளவும் என் ஞாபகத்தில் இருந்தன. இந்தச் சிறு பஞ்சமூலச் செய்யுட்பகுதி நினைவுக்கு வந்த போது முன்னே குறிப்பித்த ‘ஏக்கழுத்தம்’ என்ற மேற்கோளும் ஞாபகத்துக்கு வந்தது. “காது இரண்டும் இல்லாதவன் தலை யெடுத்துப் பார்த்தலும்” என்று சிறுபஞ்ச மூலத்துக்குப் பொருள் செய்யலாமோ வென்ற எண்ணம் உண்டாயிற்று. உடனே சிறுபஞ்ச மூலத்தை எடுத்து வைத்துக் கொண்டேன். நல்லார்கள் கேட்பின் நகையை உண்டாக்கும் செய்திகளைத் தொகுத்துக் கூறவந்த சிறுபஞ்ச மூல ஆசிரியர், முதலில் கல்வியில்லாதவன் ஆராய்ச்சி செய்து காணும் நுட்பத்தைக் கூறிவிட்டு அடுத்ததாக, “காதிரண்டும் இல்லாதா னேக்கழுத்தஞ் செய்தலும்” என்பதைக் கூறுகிறார். நச்சினார்க்கினியர், ‘ஏக்கழுத்தம்’ என்னும் தொடரில் ஏ என்பதற்கு மேல் நோக்குதல் என்று பொருள் செய்திருக்க வேண்டுமென்று தோன்றியது. ஏக்கழுத்தமென்பதற்குக் கழுத்தை மேலே உயர்த்துதல் என்று பொருள் செய்தால் சிறுபஞ்சமூலத்துக்குப் பொருள் விளக்கமாகும்.
ஒரு சங்கீத வினிகையைக் கேட்பதற்கு ஆடவரும் பெண்டிரும் போயிருந்தார்கள். அந்தக் கூட்டத்தில் ஒருவன் செவிடு. சங்கீத வினிகை நடைபெறுகையில் அவன் தலையைத் தூக்கி அசைக்கிறான். அவன் செவிடென்று தெரிந்தவர்கள் சங்கீத இனிமையை மிக நன்றாக அனுபவிப்பதாக அவன் காட்டிக்கொள்வதைப் பார்த்துச் சிரிக்க மாட்டார்களா? இந்தக் கருத்தை, “காதிரண்டுமில்லாதா னேக்கழுத்தம் செய்தலும்” என்ற அடி உணர்த்துகிறதென்று கண்டு கொண்டேன். சிறு பஞ்சமூலப் பதிப்பில் எக்கழுத்தமென்ற பாடமே காணப்பட்டது.

நீதிநெறி விளக்கத்தில், “ஏக்கழுத்த மிக்குடைய மாகொல், பகை முகத்த வெள்வேலான் பார்வையில் தீட்டும், நகை முகத்த நன்கு மதிப்பு” (39) என்று வீரச் சிறப்புடைய ஓர் அரசனது பார்வையைக் குறிக்கிறார் குமரகுருபரர். அந்தச் செய்யுளிலும் எக்கழுத்தமென்றே பதிப்பிக்கப் பெற்றிருந்தது.

பிறகு சிந்தாமணியில் காந்தருவதத்தையாரிலம்பகத்தை ஆராய்ந்து வருகையில் நாலாவது பாட்டில் “ஏக்கழுத்தம்” என்ற சொல்லே வந்தது. அங்கே நச்சினார்க்கினியர் தெளிவாக, ‘ஏக்கழுத்தம்-தலையெடுப்பு’ என்று உரை எழுதியிருக்கிறார். அதற்கு மேல் வேறு என்ன ஆதாரம் வேண்டும்? சிறுபஞ்சமூலச் செய்யுளையும் நீதிநெறி விளக்கச் செய்யுளையும் திருத்திக் கொண்டேன். அப்போது சந்தோஷத்தால் எனக்குக் கூடச் சிறிது ‘ஏக்கழுத்தம்’ உண்டாயிற்று.

இன்று நாம் தமிழ்மொழி செம்மொழிகளில் ஒன்றெனவும் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னரே இலக்கியம் கண்ட மொழியெனவும் பெருமைப் பட்டுக் கொள்கிறோம். இந்தப் பழைமையை ஆதாரபூர்வமாக நிரூபித்த பெருமை உ.வே.சா. அவர்களையே சார வேண்டும். அந்தக் கிழவன் தெருத் தெருவாய்த் திரிந்து பழந்தமிழ் இலக்கியங்கள் தாங்கிய அரிய ஓலைச்சுவடிகளைச் சேகரித்து அவற்றிலே பிரதிகளை ஒப்புநோக்கி அல்லும் பகலும் உழைத்து இந் நூல்களை அச்சேற்றியிருக்காவிடில் சிலப்பதிகாரமும் இல்லை, பத்துப்பாட்டும் இல்லை, தமிழர் பெருமையும் புதையுண்டு போயிருக்கும். உ. வே. சா. வின் பணிகளைப் போற்றுவதோடு நில்லாமல், அரும்பாடுபட்டு அவர் பதிப்பித்த இந்நூல்களைச் சிறிதளவாவது கற்றறிந்து ஆராய்தலே அப் பெருமகனாருக்கு நாம் செய்யும் உயரிய நன்றிக் கடனாகும்.
 
உசாத்துணைகள்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று

கிரந்தம் தவிர்ப்போம்

அக்கரைச் சீமையின் அழகு