தமிழ்த் தாத்தா
ஏட்டுச் சுவடிகளிலேயே செல்லரித்து மடிந்து போயிருக்க வேண்டிய பல்வேறு பழந்தமிழ் நூல்களைத் தேடிப் பதிப்பித்துத் தமிழுக்குப் பெருந்தொண்டாற்றியவர் 'தமிழ்த் தாத்தா' என்று அன்போடு அழைக்கப்படும் உ. வே. சாமிநாதன். ஐம்பெரும் காப்பியங்களில் சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, மணிமேகலை ஆகிய மூன்றும், பத்துப்பாட்டு நூல்கள் அனைத்தும், எட்டுத்தொகை நூல்களில் புறநானூறும் சாமிநாதனின் பெருமுயற்சியால் ஏட்டுச் சுவடிகளிலிருந்து அச்சுக்கூடமேறின. இவைதவிர பல்வேறு வெண்பா, அந்தாதி, தூது, உலா, பரணி வகை நூல்களையும் தேடிப் பதிப்பித்தார். இவர் அச்சிட்ட நூல்களின் எண்ணிக்கை 90ஐத் தாண்டுகின்றது. இந்நூல்களுக்கான மூலச் சுவடிகளைப் பெறுவதற்காக ஊர் ஊராகப் பயணப்பட்டு பல இடர்களைச் சந்தித்து அயராது முயற்சி செய்து வெற்றி கண்டவர். ஏட்டுச் சுவடிப் பிரதிகளைச் சேகரித்து செல்லரித்த பிரதிகளிலே எழுதியிருப்பது இன்னதென்று உணர்ந்து பல்வேறு பிரதிகளை ஒப்புநோக்கிச் சரியானது இன்னதென்று தேர்ந்து பதிப்பிப்பதென்பது அத்தனை இலகுவான செயலல்ல. தேடல் ஒருவகை இடர் என்றால், சுவடிகளிலே எழுதியிருப்பது இன்னதென்று அறிவது ...