காடு காத்த தியாகிகள்
உலகில் உள்ள அனைத்து உயிரினங்களினதும் இருப்புக்கு இயற்கை இன்றியமையாதது. மனிதர்களோ அல்லது விலங்குகளோ இயற்கையோடு ஒன்றி வாழ்ந்து இயற்கையைப் பாதுகாத்தல் வேண்டும். சுற்றுச் சூழல் பாதுகாப்பைப் பற்றி இன்று பல்வேறு நாடுகளும் அரச சார்பற்ற நிறுவனங்களும் வலியுறுத்தி வருகின்றன. எனினும், இவ்வாறான சூழல் பாதுகாப்பு இயக்கங்களுக்கு முன்னோடியாக ஒரு மக்கள் குழுமம் செயற்பட்டு வந்துள்ளது. இந்தியாவின் ராசசுத்தான் மாநிலத்தில் வாழ்ந்துவருகின்ற பிசுணோய் மக்களே உலக சூழல் பாதுகாப்பு இயக்கங்களுக்கு அரிச்சுவடி கற்பித்தவர்கள். மேற்கு ராசசுத்தானின் தார் பாலைநிலத்தின் நடுவில் அமைந்துள்ள பகுதிகளில் நூற்றாண்டுகளாக வாழ்ந்துவரும் பிசுணோய் மக்கள் மரங்களை உண்மையிலேயே கடவுள்களாகக் கருதி வழிபட்டு வருகின்றனர். மேலும், இறந்தவர்களை எரிப்பதற்கு மரங்கள் தேவைப்படும் என்பதால் இறந்தவர்களைப் புதைக்கும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். எல்லாவற்றுக்கும் மேலாக இயற்கையை, குறிப்பாக மரங்களைப் பாதுகாக்கும் முயற்சியில் தமது இன்னுயிரையும் ஈந்த வரலாறும் இம் மக்களுக்கு உண்டு. செப்டெம்பர் 11, 1730ம் ஆண்டு, பிசுணோய் மக்கள் அதிகமாக வாழும் கெசாரி எனும...